2024, அக்டோபர் 06 அன்று இந்திய விமானப்படை தனது 92 வது ஆண்டு விழாவையொட்டி, உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மெய்சிலிர்க்கவைக்கும் விமான சாகசக் காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது.
15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இதனைக் கண்டுகளித்தனர். வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆற்றல், வல்லமை, தற்சார்பு என்பதாகும். இந்திய விமானப்படையின் வலிமையையும் திறமையையும் இந்த சாகசக் காட்சி தெளிவாகப் பிரதிபலித்தது. ஒப்பிடமுடியாத பறக்கும் வலிமையை வெளிப்படுத்தி, இந்திய விமானப்படை விமானிகள் சென்னை வானத்தை கண்கவர் நிகழ்வுகளால் நிரப்பினர்.
இந்தக் காட்சி இந்திய விமானப்படையின் வெல்லமுடியாத வலிமையையும் உத்வேகத்தையும் வெளிப்படுத்தியது. “பெரும் புகழுடன் வானத்தைத் தொடு” என்ற குறிக்கோளை எதிரொலித்தது.
நவீன, வலிமைமிக்க சக்தியாக மாறுவதை நோக்கிய இந்திய விமானப்படையின் பயணத்தை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது. அதிநவீன போர் விமானங்கள் முதல் போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வரை இதில் இடம்பெற்றிருந்தன. தற்சார்பை நோக்கிய தேசத்தின் பாதையை அடையாளப்படுத்தும் தேஜஸ், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏ.எல்.எச்), இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசந்த், இந்துஸ்தான் டர்போ பயிற்சிவிமானம்-40 (எச்.டி.டி -40) ஆகியவை இந்த விமான அணிவகுப்பில் இடம்பெற்றது சிறப்பம்சமாகும். சுகோய் -30 எம்.கே.ஐ. தாழப்பறந்து நிகழ்த்திய விமான வித்தை பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
இது இந்திய விமானப்படை விமானிகளின் மிக உயர்ந்த தொழில்முறை நிலைக்கு எடுத்துக்காட்டாகும்.
மாபெரும் நிறைவு நிகழ்வில் சூர்யகிரண் மற்றும் சாரங் விமானவித்தைக் குழுக்களின் பிரமிப்பூட்டும் சாகசங்கள் இடம்பெற்றன. இவை பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தன. இந்த விமானக் கண்காட்சி வான்வழி நிபுணத்துவத்தின் காட்சியாக மட்டுமின்றி, இந்தியாவின் திறன், அதிகாரமளித்தல், தற்சார்புக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சக்திவாய்ந்த நினைவூட்டலாகவும் அமைந்தது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















