போலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது.
எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா,உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்,” என்று அவர் கூறினார்.