ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் மதுரை வருகையையொட்டி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் :
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. உலகின் பெரிய சேவை அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்., முதன்மையாக திகழ்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்திய மக்களின் உயர்வுக்கும் சேவை ஆற்றுகிற அமைப்பாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது.
மோகன் பகவத், மதுரை, கன்னியாகுமரி பகுதிகளில் 22 முதல் 26-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவர் மதுரை வருகைக்கான ஏற்பாடுகளை அங்குள்ள அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் ‛அதி உயர் பாதுகாப்பு’ கொண்ட தலைவர் வருகையின்போது வழக்கமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை பின்பற்றி மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். இதற்கென மதுரை மாநகராட்சி துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணிகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக தமிழக அரசு அவரை பணி விடுவிப்பு செய்துள்ளது மிகவும் வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது.
யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா? பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவர்கள் வரும்போது அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்ட விரோதமா? இந்த நடவடிக்கையின் மூலம் அரசு அதிகாரிகள் எந்த வகையில் செயல்பட வேண்டும் என தமிழக அரசு விரும்புகிறது என்று புரியவில்லை.
திமுக.,வின் சாமானியத் தலைவர்கள் சென்றால் கூட, மாநகராட்சி அதிகாரிகளே நேரில் சென்று சாலை சீரமைப்பு, அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அரசு தாங்கள் விரும்பாத அமைப்பின் மிக முக்கியமான தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை வழக்கம்போல் செய்த அதிகாரிக்கு தண்டனை கொடுப்பது நியாயமா? மேலும் இத்தகைய நடவடிக்கை தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
தமிழக அரசு நேர்மையாக பாரபட்சமின்றி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றால் துணை ஆணையர் சண்முகம் பணிவிடுவிப்பு ரத்து செய்யபட வேண்டும். இல்லையென்றால் திமுக ஆட்சியின் ஒருதலைபட்சமான செயலையும், அதிகாரிகளை பழிவாங்குகிறது செயலையும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்செல்லப்படும். என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















