வளர்ச்சி பாதையில் காஷ்மீர் ! ஜம்மு காஷ்மீர் – டெல்லி எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டப் பணி தொடக்கம் !

கட்ரா (ஜம்மு காஷ்மீர்) – டெல்லி எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டப் பணி தொடங்கியுள்ளது. இது 2023ஆம் ஆண்டில் நிறைவடையும். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு கட்ராவில் இருந்து டெல்லிக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றுவிட முடியும். ஜம்முவில் இருந்து டெல்லியை ஆறு மணி நேரத்தில் அடைய முடியும்.

இந்தப் பணி நிறைவடைந்த பிறகு, காஷ்மீர் மக்கள் விமானம் அல்லது ரயில் மூலம் டெல்லி செல்வதற்குப் பதிலாக சாலை வழியாகவே செல்வதை விரும்புவார்கள் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று புதுடெல்லியில் கூறினார். கட்ரா மற்றும் அமிர்சரஸ் புனித நகரங்களை இணைப்பதாக இந்தச் சாலை இருக்கும். வழியில் வேறு பல முக்கியமான மத வழிபாட்டுத் தலங்களையும் இந்தச் சாலை இணைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

M/s Feedback Consultants Ltd நிறுவனம் கருத்தறியும் ஆய்வை நடத்திய பிறகு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏறத்தாழ முடிந்து, பணிகள் தொடங்கிவிட்டன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ரூ.35 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்தச் சாலை ஜம்மு காஷ்மீரில் ஜம்மு, கதுவா, பஞ்சாபில் ஜலந்தர், அமிர்தசரஸ், கபுர்தலா மற்றும் லூதியானா நகரங்களை இணைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

அதே சமயத்தில் பதன்கோட்  மற்றும் ஜம்மு இடையிலான தேசிய நெடுஞ்சாலையை 4 வழிப் பாதையில் இருந்து 6 வழிப் பாதையாக மாற்றுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஜம்மு, கதுவா, பதன்கோட் செல்வோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

மூன்று ஆண்டுகளில் இந்தப் பணிகளை முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் முதலீடுகளை ஈர்த்தலை ஊக்குவிப்பதற்கான முத்திரை பதிக்கும் புரட்சிகரமான திட்டங்களாக இவை இருக்கும் என்று அவர் கூறினார். கதுவா மற்றும் ஜம்மு போன்ற நகரங்களில் பொருளாதார மையங்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் இவை இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version