விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த வேளையில், பட்டப்பகலில் சமூக விரோதி இருவரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப் பட்டிருக்கிறார்.
இந்த கொலைக்குக் குடும்ப முன் விரோதங்கள் காரணம் என்று சொல்லப்படுகிறது. மாணவியின் வாக்குமூலத்தை கருத்தில் கொண்டு காவல்துறை கைது செய்வதிருக்கும் இருவரின் வயது 51 மற்றும் 60 எனத் தெரிகிறது. வயது முதிர்ந்தும் நம் சிந்தனை முதிராத மிருகங்களாய் நடந்துள்ளனர் இவர்கள் இருவர்களுக்கும் பெண் குழந்தைகள் இருந்திருக்கலாம். ஒரு குழந்தையை குடும்பம் முன்விரோதம் காரணத்திற்காக எரித்துக் கொலை செய்வது என்பது காட்டுமிராண்டித்தனம். விரோதங்களை தீர்த்துக்கொள்வதற்கு சட்டரீதியாக எத்தனையோ வழிமுறை இருக்கும்போது மனிதர்கள் மிருகங்களை விடக் கீழாக மாறி நடந்து கொண்டிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. வாக்கு மூல வீடியோவை கண் கொண்டு பார்க்க முடியவில்லை என்கின்றனர் ஊடக நண்பர்கள்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழகத்தில் சில சமூக விரோதிகள் தைரியமாக சட்டம்-ஒழுங்கை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற அச்சத்தை விளைவிக்கிறது.
எனவே தமிழக அரசு இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். நிர்பயா வழக்கில் என்ன தண்டனை அளிக்கப்பட்டதோ அதுபோன்று ஒரு தண்டனை அளிக்கப் பட்டால் தான் சட்டத்தின் மீது நம்பிக்கை வரும். இதுவே தமிழக அரசுக்கு பாஜக சார்பில் நான் விடுக்கும் கோரிக்கை.
ஜெயஸ்ரீயை இழுந்து வாடும் அவரது பெற்றோருக்கும் உற்றார் உறவினருக்கு கட்சியின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















