ஜோதிடம் என்பது ஒரு சாஸ்திரம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வானியல் சாஸ்திரம்.
ஒரு குழந்தை இந்த மண்ணை தரிசிக்கும் நேரத்தில் வான மண்டலத்தில கிரகங்கள் எந்த நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்களோ அந்த நிலையினை வைத்தே அந்தக் குழந்தையின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது.அதை வைத்து அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்ன என்பதை ஜோதிடர்களால் அறிய முடிகிறது.
அதற்கு காரணம், அந்தக் குழந்தை பிறந்த நேரத்தில்… அந்த நொடியில்… எந்த நட்சத்திரமோ… அதையே நட்சத்திரமாக கொண்டும், அந்த நட்சத்திரம் எந்த ராசிக்குள் இருக்கிறதோ… அதையே ராசியாக கொண்டும், அன்றைய விடியலில் சூரியன் எந்த ராசியில் எத்தனை நாழிகை இருந்தார்… அந்தக் குழந்தை பிறந்த நேரத்தில் எந்த ராசிக்குள் இருந்தார் என்பதை வைத்து அந்தக் குழந்தையின் லக்கினம் என்ன என்பதைக் கண்டறிந்தும் ஒரு ஜாதகம் கணிக்கப்படுகிறது.
அந்த ஜாதகம்… அந்தக் குழந்தையின் லக்கினத்தை அடிப்படையாக வைத்து அந்தக் குழந்தையின் அடுத்தடுத்த பாவகாதிபதிகள் யார்… யார்… என்பதையெல்லாம் கண்டறியப்படுகிறது. அந்தக் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் இருப்பு நிலையினை வைத்து அதற்குரிய திசா புத்தி இருப்பினைக் கண்டறிந்து பலன்கள் அறியப்படுகிறது.
இவை யாவும் கிரகங்களின் சஞ்சார நிலைகளை மட்டுமே அடிப்படையாக கொண்டவை… இதுதான் ஜோதிடம்.
அந்தக் குழந்தையின் லக்கினம் தொடங்கி அடுத்தடுத்து வரும் பாவகங்களின் பாவகர்கள் யார்… யார்… காரகங்களைப் புரிந்திடக் கூடிய ஒன்பது கிரகங்களும் எந்த பாவகத்தில் நட்பாக… பகையாக… ஆட்சியாக… உச்சமாக… வக்கிரமாக… இப்படி எந்த நிலையில் சஞ்சரிக்கின்றனர், யாருடன் இணைந்துள்ளனர், யாரை பார்க்கின்றனர் என்பதையெல்லாம் பார்க்கும்போது அந்தக் குழந்தையின் வாழ்க்கை முறையை, அதன் எதிர்காலத்தை சரியான ஜோதிடரால் துல்லியமாக கூற முடியும்.
ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க ஒரு கணக்கு மட்டுமே, பாடம் மட்டுமே ! ஜோதிடம் என்பது அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்றுமல்ல, மந்திரமோ, மாயமோ அல்ல. ஜோதிடம் என்பது பரம்பரை சொத்துமில்லை, அதற்கு எந்த வேடமும் தேவையுமில்லை… இனம், குலம் என்றெல்லாம் அதற்கு வரையறையுமில்லை.
இவருக்கு ஜோதிட சாஸ்திரம் கை வரும் என்பதை அவருடைய ஜாதகமே கூறும்.
இந்த நேரத்தில் ஒரு தகவல் இருக்கிறது. ஒரு ஜாதகர் பிறந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான பிறப்புகள் நிகழ்கின்றன. அந்த நிகழ்வுகளில் ஒருவர் மட்டும் உச்சத்தில் இருப்பதும் மற்றவர்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதும்… சாதாரண நிலையில் இருப்பதும் ஏன் என்ற கேள்வியும் எழலாம்.
இதற்கும் பதில் இருக்கிறது… ஒரு பிறப்பு என்பது கடந்த பிறவியின் கர்ம வினைகளை சுமந்து கொண்டே உண்டாகிறது. கடந்த பிறப்பில் அவர் அதிகமாக புண்ணியங்கள் செய்திருந்தால் அதன் வழியாக இந்தப் பிறப்பில் அவருக்கு நன்மைகள் அதிகபட்சமாக இருக்கும், கடந்த பிறப்பில் அதிகபட்சமான பாவங்களை செய்தவராக இருந்தால் அவை யாவும் சாபமாக மாறி இந்த ஜென்மத்தில் அந்த ஜாதகரின் வாழ்க்கையில் தடைகளை உண்டாக்கி தடுமாற வைத்து விடும்.
ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள், பத்து குழந்தைகள், நூறு குழந்தைகள் பிறந்தாலும் அனைவருக்கும் ஜாதகம் ஒன்றாகவே இருந்தாலும் அந்தக் குழந்தைகளுக்குரிய பலன்கள் வெவ்வேறாக இருப்பதற்கு காரணம் இதுதான்.இந்த நேரத்தில், தம்மிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிப்பதை ஒரு சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
உனக்கு இந்த தோஷம் இருக்கிறது… அந்த தோஷம் இருக்கிறது… அதற்கு நான் பரிகாரம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் பரிகாரங்கள் செய்கின்ற சக்தி படைத்த மனிதர்கள் இந்த பூமியில் யாரும் இல்லை! பரிகாரங்கள் என்பது என்னவென்றால் நம்முடைய ஜாதகத்தில் கடந்த பிறவியில் நாம் பெற்று வந்த சாபங்களின் அடிப்படையில் உண்டான தோஷங்களுக்கு… அந்த தோஷங்கள் என்னவென்பதைக் கண்டறிந்து… அந்த தோஷத்தை சுமந்து கொண்டிருக்கும் கிரக ஸ்தலத்திற்கு சென்று அங்கே பரிகாரம் செய்து கொள்வது மட்டும்தான் பரிகாரமாக இருக்க முடியும். அதுவன்றி வேறு எந்த முறையில் பரிகாரம் செய்தாலும் அது அந்த தோஷத்திற்குரிய பரிகாரமாக இருக்காது, அதனால் எந்தவிதமான பலனோ மாற்றமோ உண்டாகாது.
இதற்கும் மேலாக ஒரு சில ஜோதிடர்கள் தங்களிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களிடம் தங்களுக்கு மாபெரும் சக்தி இருப்பதுபோல் காட்டிக்கொள்ள மந்திரங்களை உச்சரிப்பதும்… கிரகங்கள் நின்ற இடத்திற்குரிய பலன்களை மூல நூல்களில் எழுதப்பட்டிருப்பதை எல்லாம் பாடலாக பாடுவதும்…ஏதோ மிகப்பெரிய சக்தி படைத்தவர்களாய் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்காக வேடம் புனைந்து கொள்வதும்… இறை சக்தி தமக்கிருப்பதாக காட்டிக் கொள்வதுமாய் உள்ளனர். ஆனால், இவை எந்த ஒன்றும் அந்த ஜாதகருக்கு எந்தவொரு பலனையும் உண்டாக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை.
காரணம் ஜோதிடம் என்பது ஒரு கணக்கு மட்டுமே… அறிவியல் சாஸ்திரம் மட்டுமே…. ஜோதிடர் என்பவர் அந்த சாஸ்திரத்தை அறிந்தவர்… கற்றவர்… அவ்வளவுதான். ஒரு ஜாதகத்தைப் பார்த்ததும் அந்த ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலையினைப் பார்த்தும், நடைபெறும் திசா புத்தியினை வைத்தும்… அவற்றின் அடிப்படையில் தம்மிடம் ஜாதகம் கேட்பவருக்கு புரியும் வகையில் பலன்களை சொல்வது மட்டும்தான் ஒரு ஜோதிடரின் வேலை.
ஜோதிடப் பலன்கள் என்பது… இந்த நேரத்தில் இப்படியொரு சங்கடமான நிலை இருக்கிறது…. இந்த நேரத்தில் சாதகமான நிலை இருக்கிறது… பதவி கிடைக்கும்… பதவி பறிபோகும்… தொழிலில் லாபம் உண்டாகும்… தொழிலில் நஷ்டம் ஏற்படும்… எதிர்பாலினரால் இந்த நிலை ஏற்படும்… எதிரிகளால் இந்த நிலை ஏற்படும்… வீடு வாங்க முடியும்… வசிக்கும் இடமும் பறிபோகும்… வேலை கிடைக்கும்… வேலையில் சங்கடம் உண்டாகும்… வருமானத்திற்குரிய சந்தோஷத்திற்குரிய நேரம்… நஷ்டம் உண்டாகி சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நேரம்… வாழ்க்கை என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பதை தெரிவிப்பதாகத் தான் இருக்கும்.
இதற்கும் மேலாக இந்த நிலையினை என்னால் மாற்றி விட முடியும் என்று யாராவது கூறுவார்களேயானால் அது முழுக்க முழுக்க பணம் பறிக்கும் ஏமாற்று வேலையாக மட்டுமே இருக்கும். அத்தகைய சக்தி படைத்தவர்களும் இங்கு எவரும் இல்லை… ஜோதிடர்கள் என்பவர்கள் மந்திரவாதியுமில்லை… அவதாரப் புருஷர்களுமில்லை… சாமிகளுமில்லை…
ஜோதிடர்கள் என்பவர்கள் ஜோதிடம் குறித்த பாடங்களைக் கற்று தேர்ந்தவர்கள் மட்டும்தான். மற்ற துறைகளில் உள்ள மனிதர்களைப் போன்றவர்கள்தான்.ஜோதிட சாஸ்திரத்தை அறிந்து ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சார நிலையை வைத்து அதற்குரிய பலன்களை சொல்பவர்கள் மட்டும்தான் ஜோதிடர்கள்.
ஒரு ஜாதகருக்கு அவருடைய வாழ்க்கை நிலையையும்… வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளையும்… பட்டம் பதவிகளையும்… செல்வாக்கையும்… வேலை வாய்ப்பையும்… பொருளாதார நிலையினையும்… சங்கடங்களையும்… பாதிப்புகளையும்… ஜாதகம் பார்க்கும் நேரத்தில் உள்ள நிலையினையும்… எதிர்காலப் பலன்களையும்… அவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலையினை வைத்து சொல்ல மட்டுமே ஜோதிடரால் முடியும்.
திறமையான ஜோதிடர்களால் அந்த ஜாதகத்தில் உள்ள சூட்சுமங்களை தெரிந்து கொள்ள முடியும்… அந்த ஜாதகருக்கு சோதனைகள் தொடர்வதற்கு என்ன காரணம்… வாழ்க்கை முழுவதும் தடைகளையே சந்திப்பதற்கு என்ன காரணம்.
… அதற்கு, எந்த கிரகம் எந்த நிலையில் சஞ்சரிக்கிறது… எந்த கிரகத்துடன் அது இணைந்திருக்கிறது… எந்த பாவத்தில் யாருடைய சாரத்தில் சஞ்சரிக்கிறது…. என்பதையெல்லாம் தெரிந்து பலன்களைக் கூறுவதுடன்… கிரகங்களால் உண்டான தோஷங்களுக்கு அந்த கிரகங்களின் ஸ்தலங்களுக்கு வழி காட்டவும் முடியும்.
ஜோதிடர் என்பவர் மனிதர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி மட்டும்தான்.கிரகங்களே ஒவ்வொரு மனிதரையும் வழி நடத்திக் கொண்டிருக்கிறது… கடந்த ஜென்மத்தின் பாவ புண்ணிய பலன்களையும் கிரகங்களே ஒவ்வொருவருக்கும் வழங்கி கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
இறை சக்தி என்பது வேறு… கிரக சக்தி என்பது வேறாகும்.
இறைவனை வேண்டினால்… தவமிருந்தால் வரம் கிடைக்கும் என்று புராணங்களின் வழியாக நாம் தெரிந்து கொண்டாலும்… உலக இயக்கத்திற்கு காரணமானவர்கள் கிரகங்கள்தான் என்பதே உண்மை. அந்த கிரகங்கள்தான் அவரவர் பாவ புண்ணிய பலன்களுக்கேற்ப… தங்களுடைய தசா புத்திகளின் வழியாகவும்… கோச்சாரத்தின் வழியாகவும் ஒவ்வொருவருக்கும் அவர் அவருடைய கர்ம வினைகளுக்கேற்ப பலன்களை வழங்கிக் கொண்டுள்ளனர்.
கிரகங்கள் இறைவனையும் விட்டதில்லை என்பதையும் இங்கே நாம் உணர வேண்டும்.
சிவபெருமானை சனி பகவான் பற்றியதன் வழியாக இறை சக்திகளும் கிரகங்களால் ஆளப்படுபவர்கள்தான் என்பதையும்…. சாபத்தின் காரணமாக விஷ்ணு பெருமான் ராமன் என்னும் மனிதனாக பிறப்பெடுத்தது அவர் பெற்ற சாபத்தின் பலனே என்பதையும் நாம் அறியும் போதே, கிரகங்களின் வலிமைகளையும்… ஒரு பிறவியில் பெற்ற சாபங்களால் அடுத்த பிறவியில் அனுபவிக்கும் வேதனைகளையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணிக்கப்படும் ஜாதகமே அவருடைய வாழ்க்கைக்குரிய வழிகாட்டியாகும்.
அந்த ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலையினை வைத்தும் தற்பொழுது சஞ்சரிக்கும் நிலையினை வைத்தும், திசா புத்திகளை வைத்தும் அந்த ஜாதகரின் நிலையினை தெரிந்து கொள்ள முடியும்… அந்த ஜாதகருக்கு எந்த கிரகத்தினைவைத்து தோஷம் காட்டுகிறது… எந்த வகையான தோஷத்தை அந்த கிரகங்கள் காட்டுகிறது என்பதை வைத்து அந்த கிரகத்தின் ஸ்தலத்திற்கு சென்று அந்த கிரகத்தை சரண் அடைவதின் வழியாக… அந்த கிரகத்திற்கு சாந்தி செய்வதின் வழியாக… அந்த கிரகத்தினால் உண்டான தோஷம்… பாதிப்பு விலகி நெருக்கடிகள் குறைய ஆரம்பிக்கும்.
இந்த ரகசியத்தை உணர்ந்தவர்… கிரகங்களின் சஞ்சார நிலைகளை வைத்து அந்த கிரகங்களால் உண்டாகிடக் கூடிய யோக மற்றும் தோஷ பலன்களை தெரிந்தவர்கள் மட்டுமே ஜோதிடர்கள்… எந்த கிரகத்தால் பொதுவாகவோ… நிகழ் காலத்திலோ எத்தகைய பலன் உண்டாகும் என்பதையறிந்து கூறி வழி காட்டுபவர்கள் மட்டும்தான் ஜோதிடர்கள்.
ஜாதகம் பார்ப்பவர்களும் இந்த உண்மையை உணர வேண்டும்… தங்களுடைய ஜாதகத்தில் உள்ள பொதுவான பலன் என்ன… தற்காலத்திய பலன்… எதிர்காலத்திய பலன் எப்படி உள்ளது… கிரக சஞ்சார நிலைகளால் தோஷங்கள் ஏதேனும் இருக்கிறதா… அந்த தோஷத்திற்கு எந்த ஆலயத்திற்கு சென்று பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்…. என்பதை மட்டுமே ஜோதிடர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
காரணம், ஜோதிடர் என்பவர் வரம் கொடுக்கும் சாமியோ… தலையெழுத்தை மாற்றி அமைக்கும் சக்தியோ அல்ல… ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையினையும் தற்பொழுது சஞ்சரிக்கும் நிலையினையும் வைத்து அதற்குரிய பலன்களை கூறிடக்கூடிய வித்தகர்கள் மட்டும்தான்.
ஜோதிட வித்தகர்
திருக்கோவிலூர் பரணிதரன்
94443 93717 — 90438 93717