கொவிட்- 19 தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பெருவாரியான கொவிட் நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீரை நாடு முழுவதும் வழங்கும் மாபெரும் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் இன்று தொடங்குகிறது. இந்த இரண்டு மருந்துகளும் சிறப்பாகச் செயல்படுவதாக பலதரப்பட்ட மருத்துவச் சோதனைகளில் தெரியவந்துள்ளது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), மத்திய ஆயுஷ் அமைச்சருமான (கூடுதல் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜு தொடங்கி வைக்கும் இந்தத் திட்டம், வெளிப்படைத் தன்மை வாய்ந்த வகையிலும், தரமான முறையிலும் ஏழை, எளிய மக்களுக்கு மருந்துகள் சென்றடைவதை உறுதி செய்யும்.
அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏராளமான நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு கட்டங்களாக இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. சேவாபாரதி, இதன் பிரதான ஒருங்கிணைப்பாளராக செயல்படும்.
கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியது முதல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு ஆயுஷ் 64 மற்றும் கபசுரக் குடிநீரை நாடு முழுவதும் விநியோகிக்கும் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அறிகுறியற்ற, லேசானது முதல் மிதமானது வரையிலான கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகள், பொதுவான சிகிச்சையுடன் ஆயுஷ் 64 மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்வது சிறந்த பலனை வழங்கியிருப்பதால், வீட்டுத் தனிமையில் உள்ள நோயாளிகள், ஆயுஷ் சிகிச்சை முறைகளினால் பயனடைவதற்காக இந்த நாடு தழுவிய திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.