(புனர்பூசம் 4 ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
மனக்காரகனான சந்திர பகவானின் ஆதிக்கத்தில் பிறந்து மனதில் பட்டதை எந்தவித அச்சமும் இன்றி பேசக்கூடிய, நியாயத்தையும் நேர்மையையும் குறிக்கோளாக கொண்டு மனசாட்சியின்படி வாழ்ந்து வரும் கடக ராசி நண்பர்களே…
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 10 ம் இடமான தொழில் மற்றும் ஜீவன ஸ்தானத்தில் ராகு பகவான், 4 ம் இடமான சுகம் மற்றும் மாதூர் ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களையும் மாற்றங்களையும் சங்கடங்களையும் வழங்கி வந்தார்கள். உங்கள் உடல்நிலை, மனநிலை யாவற்றிலும் நெருக்கடி உண்டாகி இருக்கும். என்றாலும், பல சமயங்களில் உற்சாகமும் ஏற்பட்டிருக்கும். நினைத்த செயல்களை நினைத்தவுடன் நிறைவேற்ற முடியாத அளவிற்கு ஆரோக்கியத்தில் சங்கடங்களும் ஏற்பட்டிருக்கும். ஒரு சில முயற்சிகள் வெற்றிகரமாக மாறியும் இருக்கும். பதவி, மதிப்பு, கௌரவம் என்ற நிலை உங்களில் சிலருக்கு உண்டாகியிருக்கும். அதற்கு காரணம் 10 ம் இடமான கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுக்கு பலன் வழங்கி வந்த ராகு பகவான்தான். கேதுவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உங்களை ஒரு பக்கம் சங்கடத்திற்கு ஆளாக்கினாலும் மறுபக்கம் முன்னேற்றம் அந்தஸ்து என்ற நிலையையும் செல்வாக்கினையும் வழங்கியிருப்பார். அதற்காக அதிகபட்சமாக உழைத்தும் இருப்பீர்கள்.
உங்கள் தசா புத்தி நன்றாக இருந்திருந்தால் உச்சத்தையும் எட்டியிருப்பீர்கள். உங்கள் பகுதியில் உங்கள் செல்வாக்கு அதிகரித்திருக்கும். மற்றவர்களை அடக்கியாலும் நிலையையும் அடைந்திருப்பீர்கள். பல நாள் கனவுகளில் சில இக்காலத்தில் நிறைவேறிருக்கும். நட்புகளாலும் உறவுகளாலும் நல்ல நிலையை அடைந்திருப்பீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகள் உண்டாகி உங்களை நிலைநிறுத்திக் கொண்டிருப்பீர்கள்.
இந்த நிலையில்தான் 8.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9 ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கும், கேது பகவான் 3 ம் இடமான தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகி 26.4.2025 வரை அங்கிருந்து உங்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களை வழங்கிட இருக்கிறார்கள்.
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எத்தகைய பலன்களை வழங்கப்போகிறது? 9 ம் இடத்து ராகுவும் 3 ம் இடத்து கேதுவும் நன்மைகளை வழங்குவார்களா? முன்பிருந்த நிலையில் முன்னேற்றம் இருக்குமா? புதியதாக ஏதேனும் சங்கடங்கள் தோன்றுமா? ஆரோக்கிய நிலையில் முன்னேற்றம் உண்டாகுமா? வாழ்க்கையில் ஏதாகிலும் மாற்றங்கள் தோன்றுமா? பாக்கிய ஸ்தானத்து ராகு எத்தகைய யோகத்தை வழங்குவார்? சகோதர ஸ்தான கேது எத்தகைய பலன்களை வழங்குவார்? யோகத்திற்கும் போகத்திற்கும் வாய்ப்பு உண்டா? ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் வழியுண்டா? இருக்கின்ற செல்வாக்கு நீடிக்குமா? கௌரவமும் அந்தஸ்த்தும் நிலைக்குமா? குடும்பத்தில் நிம்மதி இருக்குமா? தொழிலில் உத்தியோகத்தில் நன்மைகள் அதிகரிக்குமா? சங்கடங்கள் தோன்றுமா? நினைத்ததை நினைத்தபடி சாதித்துக் கொள்ள முடியுமா? எதிர்ப்புகளை வீழ்த்தி வெற்றி பெற்று முன்னேற முடியுமா? எதிர்ப்பாலினரால் சங்கடங்கள் உண்டாகுமா? சாதகமான நிலை உருவாகுமா? பிள்ளைகளால் நன்மைகளைக் காண முடியுமா? மற்றவர்கள் எதிரில் செல்வாக்குடன் வாழ முடியுமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது….
பாக்கிய ஸ்தானத்து ராகுவின் சஞ்சாரமும் பார்வைகளும்
8.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9 ம் இடமான மீன ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 3 ம் இடமான தைரிய வீரிய சகோதர ஸ்தானத்தையும், 7 ம் இடமான களத்திர ஸ்தானத்தையும் 11 ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கிறார். ராகு பகவானின் பாக்கிய ஸ்தான சஞ்சாரமும், பார்வைகளும் எத்தகைய பலன்களை வழங்கிடப் போகிறது?
பாக்கிய ஸ்தானம் எனும் 9 ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் போது உடல் நிலையில் இருந்த சங்கடங்களும், சோர்வும் விலகும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் தேடி வரும். செய்துவரும் தொழிலில் முயற்சியும் ஆர்வமும் அதிகரிக்கும். சின்னதாக முயற்சி செய்தாலும் அதில் பெரிதான வெற்றிகளைக் காண முடியும். உடன்பிறந்தோரால் உதவிகள் உண்டாகும். நண்பர்களாலும் ஒரு சில ஆதாயம் ஏற்படும். கூட்டு முயற்சிகள் பலனளிக்கும். தடைப்பட்ட கல்வி தொடரும். அல்லது கல்வியில் மேன்மை ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்க வழி உண்டாகும். சொத்து சம்பந்தமானவற்றில் நல்ல பலன்களைக் காண முடியும். குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்கள் படும் துன்பங்களையும் சங்கடங்களையும் போக்க உதவி புரிவீர்கள். அதனால் பண செலவு உண்டாகும். உங்களுக்கு மேலானவர்கள் மற்றும் மேலதிகாரிகளால் சங்கடங்களும் நெருக்கடிகளும் ஏற்படலாம். தந்தையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். தந்தைக்காக தர்ப்பை பிடிக்கும் நிலையும் சிலருக்கு உண்டாகலாம். கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும். பிள்ளைகளாலும் மகிழ்ச்சி மேலோங்கும். தெய்வத்தல யாத்திரைகள் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்க வழிவகை உண்டாகும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துகளை மாற்றி அமைக்கும்படி இருக்கும். அதன்படி நன்மையும் உண்டாகும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொதுவாக இக்காலம் உங்கள் மனதுக்கு இதமளிக்கும் காலமாக இருக்கும். செய்து வரும் தொழிலில் மட்டும் எச்சரிக்கையும் கவனமும் தேவைப்படும்.
இவை எல்லாம் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் உண்டாகும் பலன்கள் என்கிறபோது ராகு பகவானின் பார்வைகள் எத்தகைய பலன்களை உண்டாக்கும்….
சகோதர ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை
பொதுவாகவே ராகு கேது போன்ற பாவ கிரகங்களுக்கு ஒரு சிறப்பு பலன் உண்டு. அவர் 3 ம் இடத்தில் சஞ்சரிக்கின்ற காலத்திலும், அல்லது 3 ம் இடத்தைப் பார்க்கின்றபோதும் அந்த ஜாதகருக்கு யோகமான பலன்களை வழங்குவார்கள். அந்த ரீதியில் 3 ம் இடமான சகோதர, தைரிய, வீரிய, பராக்கிரம ஸ்தானத்தை ராகு பகவான் பார்த்திடவுள்ள இக்காலத்தில் உங்கள் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகி மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். காது சம்பந்தப்பட்ட வகையில் சிற்சில பிரச்சினைகள் தோன்றி மறையலாம். இழந்த கௌரவத்தை மீண்டும் அடைவீர்கள். பொன் பொருட்கள் திரும்பவும் வந்தடையும். உங்களுடைய சிறிய முயற்சிக்கும் நல்ல பலன்கள் ஏற்படும். நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த காரியங்கள் இக்காலத்தில் கூடிவரும். உறவினர்கள் உடன் பிறந்தவர்கள் நண்பர்கள் உதவி தேவைக்கு அதிகமாவே கிடைக்கும். நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். விரும்பியதை சாதித்துக் காட்டுவீர்கள் என்று சொல்லலாம். புகழ், செல்வம், செல்வாக்கு என்று எல்லாவற்றுக்கும் இக்காலத்தில் உங்களுக்கு பாக்கியம் உண்டு. வீட்டிலும் வெளியிலும் பாராட்டுகள் கிடைக்கும். தான தர்மங்களில் மனம் நாட்டம் கொள்ளும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். அரசாங்க உதவிகள் உண்டாகும். பிற இனத்தினரால் மதத்தினரால் அதிகபட்ச உதவிகள் உண்டாகும். வெளிநாட்டு பயண முயற்சிகள் வெற்றி அளிக்கும்.
களத்திர ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை
9 ம் இடத்தில் அமர்ந்து 7 ம் இடமான களத்திர ஸ்தானத்தின் மீது பார்வை செலுத்துகின்ற ராகு பகவானால், வாழ்க்கைத் துணையின் வழியே செலவுகள் அதிகரிக்கும். தடைபட்டிருந்த வருமான வாய்ப்புகள் மீண்டும் உண்டாக ஆரம்பிக்கும். உடலில் சோர்வு அசதி காரணமாக முக்கிய பணிகளை செய்வதில் தாமதம் உண்டாகும். மேல் அதிகாரியின் தொல்லை இருந்துவரும். வீண் செலவு வீண் அலைச்சல் என்று லாபமில்லாத செயல்களில் கவனம் அதிகரிக்கும். உறவினர்கள் நீங்கள் எதிர்பார்த்தது போல் நடந்து கொள்ள மாட்டார்கள். இருப்பிட வகையில் சிலருக்கு சங்கடங்கள் ஏற்படும். அதனால், இடமாற்றமும் உண்டாகும். எதிர்பாலினருடைய நட்பினால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உங்களுடைய லட்சியத்தையும் கொள்கையையும் இக்காலத்தில் விட்டு விட்டு மற்றவர்கள் கொள்கைக்கு மாறுவீர்கள். மனதில் திடமான சிந்தனைக்கு இடமில்லாமல் போகும்.
லாப ஸ்தானத்திற்கு ராகுவின் பார்வை
9 ம் இடத்தில் அமர்ந்து 11 ம் இடமான லாப ஸ்தானத்தின் மீது பார்வையை செலுத்துகின்ற ராகு பகவானால் நல்லவிதமான முன்னேற்றங்களை அடைவீர்கள். உடல்நிலையில் இருந்து வந்த சங்கடங்கள் விலகி புதிய பலம் உண்டானதுபோல் உணர்வீர்கள். மனதில் திட நம்பிக்கை அதிகரிக்கும். சரியான திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்த தொடங்குவீர்கள். உங்கள் முயற்சிக்கு அனைவரும் ஆதரவாக இருப்பார்கள். இதுவரை வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு வேலை அமையும். அரசாங்கத்தின் உதவியும் இக்காலத்தில் உண்டாகும். தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். கடன் வாய்ப்புகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் நன்மைகள் ஏற்படும். கலைஞர்கள் சிறப்படையும் காலமாக இக்காலம் இருக்கும். கல்வி கற்போர் சிறப்பு பெறுவார்கள். வெளிநாட்டு முயற்சிகள் கூடி வரும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். ஆடை ஆபரண சேர்க்கையும் சமூகத்தில் அந்தஸ்தும் உயரும். புதிய வாகனம் வாங்க வழிவகை ஏற்படும். தொட்டதெல்லாம் வெற்றியாகும் காலமாக இருப்பதால் அனைத்திலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ராகு பகவனின் ஸ்தான பலனும் பார்வைகளின் பலனும் இத்தகையதாக இருக்க, கேது பகவான் எத்தகைய பலன்களை வழங்குவார்….
சகோதர ஸ்தான கேதுவின் சஞ்சாரமும் பலன்களும்
8.10.2023 அன்று உங்கள் ராசிக்கு 3 ம் இடமான சகோதர தைரிய, வீரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் அங்கிருந்து உங்கள் ஜென்ம ராசியையும், 5 ம் இடமான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தையும், 9 ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.
3 ம் இடத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலத்தை யோக காலம் என்றே சொல்ல வேண்டும். இதுநாள்வரையில் பட்ட துன்பங்கள், துயரங்கள், வறுமை, நோய்த்தொல்லை போன்ற அனைத்தும் இனி உங்களை விட்டு விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் நோய் பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியமான நிலையை அடைவார்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குதல் அல்லது, வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்தல் இக்காலத்தில் நிகழும். இருந்தாலும், வரவிற்கு மீறிய செலவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். பணத்தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க செலவை கட்டுப்படுத்த வேண்டும். வங்கி சேமிப்புடன் பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் பல நன்மைகள் காண முடியும். மேலதிகாரிகளின் ஆதரவு இக்காலத்தில் அதிக அளவில் உண்டாகும். வருமானத்தை விட உபரி வருமானம் அதிக அளவில் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் தக்க தருணத்தில் ஆலோசனை தந்து உங்கள் முன்னேற்றத்திற்கு துணை புரிவார்கள். குழந்தை பாக்கியம் சிலருக்கு ஏற்படும். விவசாயம் கால்நடைகளில் அபிவிருத்தியும் ஆதாயமும் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி என்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். நவீன பொருட்களின் சேர்க்கை அதிக அளவில் உண்டாகும்
இவை எல்லாம் மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் உண்டாகப் போகும் பலன்கள் என்கிறபோது கேதுவின் பார்வைகளால் எத்தகைய பலன்கள் உண்டாகப் போகிறது….
ஜென்ம ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை
3 ம் இடத்தில் அமர்ந்து ஜென்ம ராசியை பார்க்கும் கேது பகவான் நன்மையும் தீமையும் கலந்த பலன்களை வழங்குவார். ஆரம்பத்தில் சங்கடங்களும் பிற்பகுதியில் யோகமும் என்ற நிலையை அடைவீர்கள். பொதுவாக ஜென்ம ராசியில் கேது பகவான் அமரும் போதும், ஜென்ம ராசியை அவர் பார்க்கும் போதும் நிறையவே படிப்பினைகளை வழங்குவார். சங்கடங்கள் ஏற்படுத்தி உறவுகளையும் உலக வாழ்க்கையையும் புரிந்து கொள்ளக்கூடிய வழியைக் காட்டுவார். அதன்பிறகு யோகத்தை வழங்கி அந்த யோகத்தை தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் உங்களை உருவாக்குவார். அந்த நிலையில் ஜென்ம ராசியை கேது பகவன் பார்க்கின்ற காலத்தில், குடும்பத்தில் சங்கடங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு கடுமையான நோய் என்ற நிலையும், சிலர் விபத்துகளில் சிக்கி அதன் காரணமாக செலவுகள் அதிகரிப்பதுமாக இருக்கும். உங்கள் உடல் நிலையிலும் ஆரோக்கியம் சரிவர இருக்காது. மனதில் இனம் தெரியாத பயம், அச்சம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் மந்த நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் ஏற்படும். வீட்டில் நெருப்பு மின்சாரத்தால் பாதிப்புகள் ஏற்படும். இவையெல்லாம் முற்பகுதியில் நீங்கள் காணப்போகும் பலன்களாக இருக்கும். பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் செய்கின்ற தொழிலில் ஆதாயம் ஏற்படும். மேலதிகா அல்லது முதலாளிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை
3 ம் இடத்தில் அமர்ந்து பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்க்கும் கேது பகவானால் சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள் சந்திப்பும் அவர்களால் உதவியும் உண்டாகும். செய்துவரும் தொழிலில் சில சிரமங்களும் சங்கடங்களும் கவலைகளும் ஏற்பட்டாலும் உழைப்பிற்கு ஏற்ற ஆதாயம் உண்டாவதுடன் முன்னேற்றமும் இருக்கும். சொத்து பூமி சம்பந்தமான வழக்குகள் ஏற்பட்டாலும் அதில் வெற்றி உண்டாகும். இருப்பிட வகைகளில் இடமாற்றம் ஏற்படும். உறவினர்களிடையே சண்டை சச்சரவு என்ற நிலை ஏற்படும். கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும். மனைவிக்கு கருச்சிதைவு அல்லது உடலில் கோளாறு தோண்றும். இக்காலத்தில் விரோதிகள் பலம் பெறுவார்கள் அதனால் சில சங்கடங்களை அடைவீர்கள்.
பாக்கிய ஸ்தானத்திற்கு கேதுவின் பார்வை
3 ம் இடத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தை பார்க்கும் கேது பகவானால், செய்து வரும் தொழிலில் நிம்மதியும் லாபமும் அடையக்கூடிய நிலை உண்டாகும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பொருள் வரவு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத வகையில் உறவினர்கள் வழியில் இருந்து, சொத்து பணம் போன்றவை கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் நல்ல பலன்களை தரும். தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு, மருத்துவ செலவுகள் என்று ஏற்படும். முதலாளி மற்றும் மேலதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை உண்டாகும். மனம் திருப்திடையும் வண்ணம் விருந்துகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தெய்வத் தலங்களுக்கு சென்று வரும் பாக்கியமும் ஏற்படும். இயந்திர வாகன வகை இயக்கங்களில் அதிக விழிப்புணர்வு தேவையாக இருக்கும். பூர்வீக சொத்துகளின் வழியே பிரச்சனைகள் தோன்றும்.
பொதுப் பலன்கள்
ராகு கேதுவின் சஞ்சாரத்தை வைத்தும் அவர்கள் பார்க்கும் பார்வைகளை வைத்தும் உண்டாகப் போகும் பலன்களில் மூன்றில் இரண்டு பகுதி உங்களுக்கு நன்மையாகவே இருக்கப்போகிறது. ராகு பகவான் பாக்கிய ஸ்தானமான 9 ம் இடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு பாக்கியத்தை அதிகரிக்கப் போகிறார். செல்வாக்கை உயர்த்தப் போகிறார். அவர் பார்க்கும் இடங்களின் வழியே தைரியத்தையும் புதிய துணிவையும் நட்புகளின் கூட்டணியால் எதிர்பாராத வெற்றிகளையும் எதிர்பார்த்தவற்றில் ஆதாயங்களையும் அடைய இருக்கிறீர்கள். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்ற வார்த்தைகள் இப்போது உங்கள் வாழ்க்கையில் உண்மையாகும் எந்த ஒன்றையும் செய்து பார்க்கும் துணிச்சல் உண்டாகி அதன் வழியே எதிர்பாராத லாபங்களையும் காண்பீர்கள். அத்துடன் கேது பகவான் உங்கள் ராசிக்கு சகோதர, தைரிய, வீரிய பராக்கிரம ஸ்தானமான 3 ம் இடத்தில் சஞ்சரித்து உங்களை வெற்றி நடைபோட வைத்திடுவார். உங்களுக்குள் அசாத்தியமான துணிவு உண்டாகி வேகமாக செயல்படுவீர்கள். எதிர்ப்புகளை எல்லாம் இல்லாமல் செய்கின்ற அளவிற்கு பலத்தை வழங்கி உங்களை எதிர்ப்பவர்களை தோற்கடிக்க செய்யும் அளவிற்கு புத்தி சாதுரியத்தை வழங்கி உங்கள் நிலையில் மிகப்பெரிய மாற்றத்தை வழங்குவார். கேது பகவான், உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பதன் வழியாக சில படிப்பினைகளை வழங்கி முன்னேற்றத்தை உண்டாக்குவார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதான பார்வையால் குடும்ப உறவுகளைப் புரிய வைப்பார். சிலருக்கு பரம்பரை சொத்துகள் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தின் மீதான பார்வையால் பெருமளவில் நன்மைகளையே வழங்கிட இருக்கிறார். ஒரு சில நேரங்களில் சின்னச் சின்ன சங்கடங்கள் வந்தாலும் அவையெல்லாம் உங்களுக்கு படிப்பினையாக அமைந்து எப்படி வாழ வேண்டும் என்ற வழியை உங்களுக்கு காட்டுவதாக இருக்கும். இக்காலத்தில் யோசித்து நிதானமாக முடிவுகளை எடுப்பதன் மூலம் மிகச் சிறப்பான பலன்களை அடைய முடியும்.
குரு – சனி சஞ்சாரப் பலன்கள்
ராகு பகவான் பாக்கிய ஸ்தானமான 9 ம் இடத்தில், கேது பகவான் சகோதர ஸ்தானமான 3 ம் இடத்தில் சஞ்சரிப்பதாலும், அவர்களுடைய பார்வைகளாலும் பலன்களை வழங்கிட உள்ள நிலையில், 31.4.2024 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரித்து பலன்களை வழங்கிட இருக்கின்றார். கடந்த 22.4.2023 முதல், பத்தாம் இடத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்த பிறகு உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகளையும், இடமாற்றத்தையும், சங்கடங்களையும் ஏற்படுத்தி வந்த குரு பகவான், 1.5.2024 முதல் லாப ஸ்தானமான 11 ம் இடத்தில் சஞ்சரித்து நற்பலன்களை வழங்கப் போகிறார். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை, முன்னேற்றத்தையெல்லாம் லாப குரு வழங்குவார். உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நண்பர்களால் உதவி, பெரியோர்களால் ஆதாயம் என்ற நிலையை உருவாக்குவார்.
இந்த நேரத்தில் உங்கள் ராசிக்கு 7 ம் இடத்தில் வக்கிர கதியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனிபகவான் 20.12.2023 முதல் 8 ம் இடமான ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரித்து பலன்களை வழங்கிட இருக்கிறார்.
சனி பகவானின் இந்த சஞ்சார நிலை உங்களுக்கு சங்கடங்களை வழங்குவதாகவே இருக்கும். குறிப்பாக உடல் நிலையில் அதிகபட்சமான சங்கடங்கள் ஏற்படலாம், பரம்பரை நோய்களாலும், தொற்று நோய்களாலும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவைப்படும். ஆயுள்காரகன் ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்ற போது ஆயுள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவார் என்பது பொதுவான விதி. இருந்தாலும், உங்கள் பிறப்பு ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் நிலை, நடைபெற்று வரும் திசா புத்தி போன்றவற்றையும் கவனிக்க வேண்டும். இருப்பினும், 8 மிட சனிக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்.
பரிகாரம்
ஒருமுறை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி, பக்தியுடன் சனி பகவானுக்கு நல்லெண்ணை தானம் செய்து பூஜையில் பங்கேற்று வணங்கி வழிபட்டுவர சங்கடங்கள் போகும். குல தெய்வ வழிபாடு இக்காலத்தில் உங்களைப் பெரிதும் பாதுகாக்கும்.