கர்ணன் போல, கும்பகர்ணன் போல சிங்கமுகனுக்கும் தனி வரலாறும் கதையும் பின்னணியும் உருக்கமான முடிவும் உண்டு
சிங்கமுகன் மாபெரும் ஆற்றல் வாய்ந்தவன், தனி வரம் பல பெற்றவன். சிவனிடம் ஆசிவாங்க செய்த யாகத்தில் தன் தலையினை வெட்டி போட்டதால் அவனுக்கு வெட்ட வெட்ட தலைமுளைக்கும் வரம் கொடுக்கபட்டது ஆனால் சிவன் முன்னால் மட்டும் அது செல்லாது
அதுமட்டுமன்றி எமனின் மகள் விபூதிகையினை திருமணம் செய்திருந்தான் அந்த சிங்கமுகன், அப்பொழுது அவனுக்கு எம அஸ்திரம் என ஒன்று கிடைத்தது, அந்த அஸ்திரத்தை யாரை நோக்கி வீசுவானோ அங்கு எமன் வந்து அவன் உயிர் பறிப்பார்
இது போக நாராயண அஸ்திரம் உட்பட்ட பல பிரமாண்ட அஸ்திரம் அவனுக்கு இருந்தது
அவனுக்கு இரண்டாயிரம் கைகள் இருந்தன மாபெரும் உயரமும் அகலமும் கொண்ட பெரும் ராட்சத வடிவில் இருந்தான். தாராகசுரனுக்கு பின் சூரனின் பெரும் பலம் அவனே
அவன் அசுரன் என்றாலும் நியாய தர்மங்களை அறிந்தவன், சாஸ்திர வித்வான். அரச கடமை என அண்ணனோடு இருந்தானே அன்றி அடிக்கடி தர்மங்களை போதிக்கவும் தவறவில்லை
சூரசம்ஹாரத்துக்கு மூல காரணமே சூரன் ஜெயந்தன் எனும் இந்திரன் முதலான தேவர்களை கடத்தி சிறைவைத்தது, அவர்களை மீட்கத்தான் முருகன் இப்பக்கம் வந்தார்.
தூதுவந்த வீரபாகுவும் அதை தெளிவாக சொன்னார், அப்பொழுது தூதனின் பேச்சில் நியாயம் இருப்பதை எடுத்து சொன்னவன் அந்த சிங்கமுகன். ஆனாலும் அவன் திருந்தவில்லை
விபீஷ்ணன், விதுரன் என எல்லோரின் சாயலும் அவனிடம் இருந்தது ஆனால் அசுர குலம் எனும் ஆண்வமும் அதிகம் இருந்தது, முருகன் சிவன் அம்சம் அவனை வெல்ல நம்மால் முடியாது என அவர் வாய்விட்டு சொன்னபொழுதும் அசுரன் ஒருவன் சரணடைந்தான் எனும் ஒரு அவமானத்தை சந்திக்கவும் அவன் தயாராக இல்லை.
அந்த ஆணவமே சூரபத்மன் சொன்னவுடன் களம்புக சொன்னது
போர்களத்துக்கு ஏழு கடலும் திரண்டு வந்த ஆர்பரிப்புடன் வந்தான் சிங்கமுகன், 1008 அண்டங்களையும் வென்றவன் என்பதால் அவன் களம் புகுவதே பெரும் அச்சமூட்டுவதாக இருந்தது
அவனின் வான்வரை உயர்ந்த உருவமும் சரசரவென இயங்கும் கரங்களும், ஒரே நேரத்தில் ஏகபட்ட விஷயங்களை செய்யும் அவன் தலையும் இன்னும் மகா பரந்த மார்புமாய் வானமே வந்தது போல் வந்தான்
பானுகோபனுடன் போரிட்ட வீரபாகு இலட்சத்து எட்டு படைவீரர்களுடன் அதாவது பூத கணங்களுடன் அவனை எதிர்த்து சென்றார்
அண்ணன் தாராசுரனை கொன்றது, அவைக்கு வந்து அண்ணன் மகன்களை கொன்றது களத்தில் பானுகோபனை கொன்றது இதெல்லாம் போக தன் மகன் அதிசூரனை கொன்றதெல்லாம் வீரபாகு என கடும் கோபத்தில் வந்த சிங்கமுகன் அவனோடு மோதினான்
வானும் தரையும் மோதுவது போது பெரும் அதிர்வுடன் யுத்தம் தொடங்கிற்று, சிங்கமுகன் வெறிபிடித்த சிங்கமாக களத்தில் நின்றான்.
சிங்கமுகன் தளபதிகளாக தசமுகன் என்பவனும், துன்முகன் என்வரும் வந்தார்கள். இதில் தசமுகனை வீரபாகுவின் தளபதி சிங்கர் என்பவர் கொன்றார், ஆனால் துன்முகன் மிக நுட்பமாக ஆடினான்
அவனுக்கு மாய வித்தைகள் தெரியும், அதை கொண்டு மறைந்தும் பறந்தும் சுழன்றும் ஆடிகொண்டிருந்தான், அதற்கு வீரபாகுவிடம் ஒரு பதில் இருந்தது அதன் பெயர் மாய அஸ்திரம்.
அதனை பயன்படுத்தும்பட்சத்தில் மாயை அகலும், அதை எடுத்து வீசினார் வீரபாகு மாயை அகன்றபின் விஷமில்லா பாம்பாக, சிறகில்லா பறவையாக நின்றிருந்த துன்முகனை அடித்து வீழ்த்தினார் வீரபாகு
தொலைவில் இருந்து இதை கவனித்த சிங்கமுகன் வீரபாகுவினை தொலைக்கும் நோக்கில் வந்தான், அவன் வருவதை தடுக்க அழல்கண்ணன் எனும் தேவரும் தண்டி என்ற தேவரும் முன் நகர்ந்து எதிர் கொண்டனர்
கடும் யுத்தம் நடந்து வீரபாகு படையினரின் அஸ்திரமும் ஆயுதமும் எதுவும் சிங்கமுகனிடம் எடுபடவில்லை, நாராயண அஸ்திரத்தை எடுத்து வீசினான் சிங்கமுகம்
நாராயண அஸ்திரம் முதன் முறையாக வேலை செய்யாமல் வீழ்ந்தது
நாராயண அஸ்திரம் என்பது ஒரு வலிமையான அஸ்திரம், அதை ஏவினால் களத்தில் யாரெல்லாம் ஆயுதத்தோடு நிற்பார்களோ அவர்களை அழித்துவிடும், மாறாக ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு அப்படியே அமர்ந்து பரம்பொருளை தியானித்தால் அப்படியே சென்றுவிடும்
இங்கோ வீரபாகு படை ஆயுதத்தை கீழே வைக்காவிட்டாலும் அது கொல்லவில்லை , ஆத்திரமுற்ற சிங்கமுகன் இதற்கான காரணம் அறிய பிரம்மனிடமே விசாரித்தான்
சிவனுக்கும் முருகனுக்கும் முன்னால் எந்த அஸ்திரமும் வேலை செய்யாது என சொல்லிவிட்டு மறைந்தார் பிரம்மன்
அப்பொழுதே முடிவு தெரிந்தாலும் அவனின் அகங்காரமும் ஆணவமும் போரை தொடர சொன்னது,பெரும் மூச்சு விட்டபடி வீரபாகுவினை நெருங்கினான்
வீரபாகு முடிந்தவரை பெரும் யுத்தம் நடத்தினார், ஆனால் அப்படி ஒரு மூர்க்கமான அசுரனை அவர் கண்டதில்லை வீரபாகுவின் எல்லா தாக்குதலையும் பலமான அஸ்திரங்களையும் தன் கையால் நொறுக்கியபடி முன்னேறி வந்தான் சிங்கமுகன்
அவன் மூச்சு காற்றிலே தேவர்படை ஆட்டம் கண்டது, வீரபாகு திகைத்தார்.
ஒரு கட்டத்தில் பூதபடைகள் அவன் தேர் முன்னேறமுடியாதபடி முற்றுகையிட்டன, அழகண்ணர் எனும் தேவர்படை தளபதி சிங்கமுகனின் தேரோட்டியினை சரித்தார்
அதை கண்டு மூர்க்கமாக கர்ஜித்த சிங்கமுகன் தேரில் இருந்து இறங்கி அழகண்ணரை அடித்து மூர்ச்சையாக்கி அதை தடுக்க வந்த அந்த தண்டி என்பவரையும் தூக்கி எறிந்தான் அவர் கடலில் விழுந்தார்
நடப்பதை கண்டு திகைத்தார் வீரபாகு, வீரபாகுவினை ஒழிக்க முதலில் தன் பலமான அஸ்திரத்தை எடுத்தாலும் அவனை தன் அண்ணனிடன் கொண்டு சேர்க்கும் விருப்பம் வந்தது, பானுகோபனிடம் அதைத்தான் சொல்லி அனுப்பினான் சூரபதுமன்
இதனால் தன் மாய அஸ்திரத்தை வீசினான், ஆம் பானுகோபன் தொடுத்த அதே அஸ்திரம். அதன் முன் நிற்கமுடியாத வீரபாகு மூர்ச்சையனார் அவரோடு அவரின் பெரும் படையே மூர்ச்சையானது.
அவர்களை அப்படியே கட்டி உதயகிரி எனும் மலையில் வைத்துவிட்டு யுத்தம் தொடர்ந்தான் சிங்கமுகன்.
வீரபாகு வீழ்ந்ததும் தேவர்களின் படைகள் சோர்ந்தன, அசுர படைகள் ஆரவாரமிட்டன முருகனை தொலைப்பேன் என மார்தட்டி நின்று தன் தண்டாயுதம் சூலம் எனும் பயங்கர ஆயுதத்தால் முருகனை நோக்கி சென்றான் சிங்கமுகன்
முருகன் புன்னகைத்து கொண்டிருந்தார், முருகனின் சேனைகள் சிங்கமுகனை நோக்கி ஓடின, முருகனை தனிமைபடுத்தும் விதமாக ஒரு பெரும் அதிசயம் காட்டினான் சிங்கமுகன்
திடீரென தன் தன் உருவத்தை பெரிதாக்கி கொண்டு முருகனின் சேனையினை அப்படியே விழுங்கினான், தன் கைகளால் அனைவரையும் கடலையினை குரங்கு பொறுக்கி உண்ணுதல் போல் விழுங்கினான்
முருகன் நடப்பதை பார்த்து கொண்டே இருந்தார், அவரின் பாலக தோற்றம் அவனுக்கு ஒரு இரக்கத்தை கொடுத்தது அவன் முருகனிடம் யுத்தம் தொடுக்கும் முன் சமரசமே பேசினான்
“உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு பிரச்சினையுமில்லை, சண்டை எங்களுக்கும் தேவர்களுக்குமானது. இதில் நீங்கள் ஏன் வரவேண்டும், தயவு செய்து திரும்பி சென்றுவிடுங்கள்”
முருகன் அமைதியாக பதில் சொன்னார் “எளியவரை வலியவர் வாட்டினால், வலியரை நாமே வாட்டுவோம், தேவர்கள் எம்மிடம் அல்லவா முறையிட்டு அழுகின்றார்கள்?, நாம் எப்படி விட முடியும்?”
அப்பொழுதும் நிதானமாக சொன்னான் சிங்கமுகன்
“பாலகனே உம்மால் எம்மை கொல்லமுடியாது, பிழைத்து போ உன்னை விட்டுவிடுகின்றேன்”
புன்னகைத்த முருகன் போருக்கு அழைத்தான், பாலகனின் போரை காண கோபசிரிப்பு சிரித்தபடி தயாரானான் சிங்கமுகன்
முருகனின் பாணம் சிங்கமுகனின் உடலை துளைக்க அவன் உடலில் இருந்து தேவ சேனைகளெல்லாம் விழுந்தன, பின் உயிர்பெற்றன
முருகன் தன் ஒன்னொரு பாணத்தை உதயகிரி நோக்கி ஏறிய அது அந்த மாய அஸ்திரத்தை உடைத்து வீரபாகுவினையும் அவன் சேனையினையும் எழுப்பியது அப்படியே அந்த பாணம் ஒரு விமானமாக மாறி அனைவரையும் திரும்பவும் களத்துக்கு அழைத்து வந்தது
தேவர்களின் சேனை மறுபடியும் அப்படியே திரும்ப வந்ததில் அதிர்ந்தான் சிங்கமுகன், முருகன் பாலன் வடிவில் வந்த தெய்வம் என்பது அப்பொழுதுதான் அவனுக்கு முழுக்க புரிந்தது
தன் ஆயிரம் கைகளில் வில் எடுத்து தன் இன்னொரு ஆயிரம் கைகளால் அம்பெடுத்து சரமென தொடுத்தான், அவன் தொடுக்குமுன் அவன் சேனை முழுக்க அழித்து போட்டார் முருகன்
தனி ஒரு ஆளாக தனித்து நின்றான் சிங்கமுகன், முருகபெருமான் அவனின் கரங்களையும் தலையினையும் தரித்து போட்டு கொண்டே இருந்தார்
அவன் பெற்றுகொண்ட வரத்தின்படி அவை முளைத்து கொண்டே இருந்தது, ஆம் அந்த வரத்தின் தன்மை அப்படி
முருகன் அறுத்தெறிய அறுத்தெரிய அவன் தலை வந்து கொண்டே இருந்தது, வீரபாகு உட்பட எலலா வீரர்களும் அச்சத்துடன் நோக்க சிங்கமுகன் சத்தமாக சிரித்து சொன்னான் “பாலகா உன்னால் என்னை கொல்லவே முடியாது, திரும்பி செல்”
முருகன் சிரித்தான் அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தம் இருந்தது, பாலகனே இனி உனை விடமாட்டேன் என சீறிய சிங்கமுகன் தன் தண்டாயுத்ததினை எறிந்தான்
அதை வானிலே தூள் தூளாக்கினான் முருகன், அடுத்து தன் கடைசி ஆயுதமான சூலாயுதத்தை எறிந்தான் அதையும் உடைத்தெறிந்தார் முருகன்
ஆயுதம் ஏதுமின்றி நின்றான் சிங்கமுகன், அப்பொழுதும் சவால்விட்டான் உன்னிடம் வேல் உண்டு என்னிடம் ஏதுமில்லை வேலை தவிர வேறு எதுவாலும் என்னை கொல்ல உன்னால் முடியுமா?
முருகன் கையினை உயர்த்த வஜ்ஜிராயுதம் எனும் ஒரு ஆயுதம் தானாக உருவாகி அசுரனின் மார்பை துளைத்தது
ஆம் வெட்டவெட்ட அவன் தலைதான் முளைக்கும், இதயத்தை அடித்துவிட்டால் அவன் பிழைக்கமாட்டான்
வஜ்ஜிராயுதம் மார்பில் தாக்கியதும் வீழ்ந்தான் சிங்கமுகன் , தேவர் பக்கம் பெரும் ஆரவாரம் உண்டாயிற்று
அப்பக்கம் யாருமில்லா தனிமரமாக நின்றிருந்தான் சூரபதுமன் அவனின் எல்லா பலமும் முருகனால் முறிந்து போயிற்று, இனி அவன் தனியாளாகவே களத்துக்கு வரவேண்டும்
சிங்கமுகன் கதை இதுதான், வீராதி வீரனும் ஆனால் ஓரளவு நல்லவனுமாகிய அவன் கதை இதுதான்
சிங்கமுகன் கதை நிறைய விஷயங்களை போதிக்கின்றது, ஆம் அவன் ஒரு பக்தன் சிவபக்தன் சிவனுக்காய் தலையினையே வெட்டி போட்ட பக்தன். அவனுக்கு தலையால் ஆபத்தில்லை என இறைவனும் வரம் கொடுத்தார்
அவன் தலையால் நிறைய சிந்தித்தான் அவனுக்கு நியாய தர்மம் தெரிந்தது, சாஸ்திரமும் இன்னும் பலவும் புரிந்தது
ஆனால் அவன் இதயம் அசுர குணத்தால் அகங்காரத்தால் நிரம்பியிருந்தது, அந்த அகங்காரமே பரம்பொருள் சாயல் என தெரிந்தும் முருகனை எதிர்த்து நிற்க சொன்னது
அந்த அகங்காரத்தாலே ஆசை எனும் அந்த தலை வெட்ட வெட்ட துளிர்த்தது, கடைசியில் அகங்காரம் அழிந்தபின்பே அவனும் அழிந்தான்
சிங்கமுகனின் கதை மனதும் அறிவும் இணைந்து மாயையில் சிக்கி ஆன்மாவுடன் நடத்தும் போராட்டத்தின் காட்சி
ஆன்மா இறைவனை அடைய துடிக்கின்றது ஆனால் லவுகீக வாழ்வின் அகங்காரமும் இன்னபிறவும் ஆசைகளை வளர்க்கின்றன, ஆயிரம் ஆயிரம் ஆசைகளை அவை வளர்க்கின்றன
ஆத்துமத்தை மீட்க வந்த ஞானம் அந்த ஆசைகளை வெட்ட வெட்ட அவை முளைகின்றன, முளைத்து கொண்டே இருக்கின்றன
ஆம் அவை வெட்ட வெட்ட முளைத்து கொண்டே இருக்கும், அதை முடிக்க ஒரே வழி இதயத்தை பெருமானுக்கு அப்படியே கொடுப்பது
ஒருவனின் மனதில் தெய்வம் குடியேறிவிட்டால் அங்கு அகங்காரம் இருக்காது, ஆசை முளைக்காது மாறாக ஞானம் பெருகும்
ஞானம் பெறுதலோ இறைவனடியில் மனதை செலுத்துவதோ சாதாரண விஷயம் அல்ல, மிகபெரும் போர் அது பாசம், பந்தம், உறவு, உலகம் , குடும்பம், பணம், பதவி, நலம் என எவ்வளவோ விஷயங்களுடன் போராட வேண்டிய விஷயம் அது
சிங்கமுகனின் ஆயிரம் தலையும் இரண்டாயிரம் கரங்களும் அதை தெளிவாக சொல்கின்றது, ஒவ்வொரு மனிதனும் ஆயிரகணக்கான ஆசையுடன் வாழ்கின்றான் வெட்ட வெட்ட முளைக்கும் ஆசையுடன் வாழ்கின்றான்
ஆசையால் வீரபாகு போல மூர்ச்சையுமாகின்றான்
இவற்றில் இருந்து இறைவன் ஒருவனே மீட்டுவர வேண்டும் , இதனாலே சொன்னார்கள் “பரம்பொருளை தேடுதலே ஞானத்தின் தொடக்கம்”
சிங்கமுகன் கதை இன்னும் தொடர்ந்து போதிக்கின்றது
மாயையும் அதன் இதர பலமும் சிவன் முன்னாலும் முருகன் முன்னாலும் நிற்காது, எந்த தீமையும் அவர்கள் முன் செயல்படாது என்பதை தெளிவாக சொல்கின்றது
பலம் வாய்ந்த அஸ்திரங்கள் அப்படித்தான் தோற்றது
சிவநாமமும் முருக மந்திரமும் அவ்வளவு சக்தி வாய்ந்தவை, அவர்களிடம் வேண்டும் ஒருவனை உலகின் எந்த கெட்ட சக்தியாலும் வெல்லமுடியாது மாயை அவனிடம் வெல்லாது.
மாயை என்றல்ல மாயையின் எந்த குழந்தையும் அவனை வெல்ல முடியாது
வீரபாகு முடிந்தவரை போராடினார், ஆனால் மாய அஸ்திரம் அவரை கட்டியது பின் முருகனே வந்து அவரை மீட்டெடுத்தார்
சிங்கமுகன் நியாயம் அறிந்தன், நிச்சயம் இறைவனடி சேர்ந்திருந்தால் அவன் பிழைத்திருப்பான் ஆனால் குலபெருமையும் அண்ணன் எனும் பாசமும் அது கொடுத்த மாய அகங்காரமும் அவனை வீழ்த்தியது
தெய்வத்தின் அடி பணியாமல் எந்த வல்ல சூராதி சூரனும் வாழமுடியாது, தர்மத்தை மீறி அதர்மம் ஒரு காலமும் வெல்லாது என்பதே சிங்கமுகன் சொல்லும் தத்துவம்
சிங்கமுகன் சொன்ன அந்த வார்த்தைகள் முக்கியமானவை, இந்து தர்மம்த்தின் தலை சிறந்த போதனையினை சொல்பவை
ஆம் இந்துக்கள் கடவுள் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாற்பட்ட சக்தி என சொன்னார்கள், இதைத்தான் சிங்கமுகனும் முருகனிடம் கேட்கின்றான்
“சண்டை எங்களுக்கும் தேவர்களுக்கும் தானே , தேவர்களுடனான சண்டையில்தானே இந்திரன் மகனை பிடித்தோம், இந்த சண்டையில் எல்லாம் கடந்த நீங்கள் ஏன் வருகின்றீர்கள்?”
முருகன் தெளிவாக சொல்கின்றார் “வலியோர் எளியோரை வாட்டினால் வலியோரை தெய்வம் வாட்டும்”
ஆம், தர்மம் எங்கெல்லாம் அழுகின்றதோ அங்கெல்லாம் இறைசக்தி இறங்கி வந்து காக்கும், பெரும் பலமும் வரமும் பெற்றதாயினும் அந்த அதர்மம் பூண்டோடு அழியும் என்பதே சிங்கமுகன் வாழ்வு போதிக்கும் பெரும் தத்துவம்..