கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 5 மாதங்களுக்குப் பின்பு கடந்த 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய மாநிலஅரசுகள் அனுமதி அளித்தது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் முன் வாசல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. கோவில் நுழைவாயிலில் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து கோவிலுக்குள் அனுமதிப்படுகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வரும் எந்த பொருட்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. நேர்ச்சைகள் மற்றும் வழிபாடுகளும் நடத்த அனுமதிக்கப்படவில்லை.
அர்ச்சனைகள் செய்ய அனுமதிக்கப்படாவிட்டாலும், கோவிலுக்குள் பக்தர்கள் சென்று அம்மனை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் தினமும் மண்டைக்காடு வந்து அம்மனை கும்பிட்டு செல்கின்றனர்.
கோவிலுக்குள் வரும் பக்தர்கள் பூஜை செய்வதற்காக பூ மற்றும் அர்ச்சனை பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் கோவில் நிர்வாகம் பூஜை செய்யும் பொருட்களை உள்ளே அனுமதிப்பது இல்லை. பக்தர்கள் கொண்டுவரும் பூஜை பொருட்களை கோவில் வாசலில் வைத்து செல்கின்றனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வாசலில் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் குவிகிறது. எனவே கோவில் வழிப்பாட்டில் உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு செய்து பூஜை பொருட்களை அர்ச்சனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டுரை எழுத்தாளர் சுந்தர்