தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், மத்திய அரசின் தேசியப் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் திருப்புகழ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் தமிழகத்துக்கு விசிட் வந்துள்ளனர். கடந்த நான்கு நாள்களாக தமிழக அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவது, ஸ்பாட் விசிட் செய்வது என்று படு பிஸியாக இருக்கிறார்கள்.
ஏப்ரல் 29-ம் தேதியன்று மத்திய குழுவினர் விசிட் செய்தது சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு! தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதில் கபசுரக் குடிநீர் எந்த அளவுக்கு முக்கியமாக செயல்படுகிறது என்பதை ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவப் பிரிவின் கமிஷனர் கணேஷ் ஐ.ஏ.எஸ்., மத்திய குழுவினரிடம் விளக்கிச் சொன்னாராம்.
அப்போது மத்திய குழுவினர், கபசுரக்குடிநீரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? என்கிற ரிஷி மூலத்தைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, கணேஷ் ஐ.ஏ.எஸ், யூகி வைத்திய சிந்தாமணி எனும் நூலில் இடம்பெற்ற ஒரு பாடலை மேற்கோள்காட்டி சொன்னாராம். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் கேட்டார்களாம். பொதுவான நோய் குறிகளுடன் `சுவை தெரியாது’ என்கிற வார்த்தையும் இருப்பதை கேட்டதும் ஆச்சர்யத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தாராம் அந்தக் குழுவில் இருந்தவர்களில் தமிழ் தெரிந்த ஒருவர். இதே அறிகுறியை நேற்றுதான் அமெரிக்க நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, அதையே ஆராய்ச்சி செய்து சித்தர் ஒருவர் எழுதியிருக்கிறாரா? அந்தப் பாடலை உங்களது வெப்சைட்டில் போட்டு பிரபலமாக்கலாமே?” என்றாராம்.
டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் திருநெல்வேலி மாவட்டம், ஈரோடு மாவட்டம்… ஆகிய ஊர்களில் நிறைய பேர் இருந்தனர். அவர்களுக்கு கபசுரக்குடிநீர் கசாயத்தைக் கொடுத்தோம். மசூதிகளில் கூட கேட்டு வாங்கிக் குடித்தனர். அதனால்தான் அங்கெல்லாம் கொரோனா தொற்று பரவவில்லை. அது கட்டுக்குள் வந்தது என்று சொல்ல… அதை குறிப்பெடுத்துக்கொண்டார்களாம்.
ஏன் இதை மகாராஷ்டிரா, குஜராத் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள்? ஏன்… இந்தியா பூராவும் எங்கெங்கு கொரோனா தொற்று அதிகமாக உள்ளதோ? அங்கெல்லாம் கபசுரக்குடிநீரை கொடுக்கலாமே? இதைப்பற்றி மத்திய அரசிடம் பேசுகிறோம் என்றார்களாம். அதற்குப் பதில் அளித்த கணேஷ், `நாங்கள் தேவையான ஸ்டாக் வைத்திருக்கிறோம். நீங்கள் சொன்னால், உடனே சப்ளை செய்கிறோம்" என்றாராம். பின்னர் மத்திய குழுவினருக்கு கபசுரக்குடிநீரை குடிக்க கொடுத்திருக்கிறார்கள்.
நாங்கள் காலையிலேயே குடித்தோம். மீண்டும் ஒரு முறை இப்போதும் குடிக்கிறோம்’ என்று சொல்லி வாங்கிக்குடித்தார்களாம்.
கபசுரக் குடிநீர் ஒரு சித்த மருத்துவ மரபு மருந்து. சித்த மருத்துவ அடிப்படையில் சுரங்களின் வகை 64 என்கின்றது யூகி வைத்திய சிந்தாமணி எனும் நூல். “சுரங்கள் எப்படி எப்படியெல்லாம் வரும், சுரங்களின்போது எந்தெந்த குறிகுணங்கள் காய்ச்சலோடு சேர்ந்து நிற்கும்? அந்தச் சுரத்தை குறிப்பிட்ட மருந்துகளை வைத்துக் குணப்படுத்தாது போனால், அது சன்னியாக எப்படி மாறும்? எனும் அபாயத்தையும் சித்த மருத்துவத்தில் விளக்கும் முக்கிய நூல் அது.
கபசுர குடிநீர்
கபசுரம் அப்படிச் சொல்லப்பட்ட சுர வகைகளுள் ஒன்று. மூன்று நான்கு நாள்களில் அதைக் குணப்படுத்த வேண்டும். அப்படி குணப்படுத்த இயலாது போகையில் அது “அபன்னியாச சன்னியாக” மாறும் என்றும், அந்த அபன்னியாச சன்னி குணப்படுத்த மிகக் கடினமான அசாத்திய நோயாகவும் அந்த நூல் விவரிக்கின்றது. இதுவரை சித்த மருத்துவர்கள், இந்த கபசுரத்தை வைரல் நிமோனியாவுக்கு அதை ஒட்டிய சுரத்திற்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.
கபசுரத்தின் குறிகுணங்களாக கூறப்பட்ட குரல் கம்மல், இருமல், மூச்சிரைப்பு, சுரம் போன்ற முக்கிய குணங்கள் கொரோனா நோயிலும் முக்கிய குறிகுணங்களாக இருந்ததால், “அந்த கபசுரத்துக்குப் பயன்பட்ட ஒரு மருந்தை நாம் ஏன் இந்தப் புதிய நோய்க்கு முயற்சிக்கக் கூடாது?’ என்று சித்த மருத்துவ மூத்த நிபுணர்கள் ஆலோசித்து தேர்ந்தெடுத்துச் சொன்ன மருந்துதான் கபசுரக் குடிநீர். இதை 15 மூலிகைகளைக் கொண்டு தயாரித்து வருகின்றனர்.
நன்றி : விகடன்