இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒரு
முறையாவது காசிக்கு செல்லவேண்டும்
என்று நினைப்பதுண்டு.
கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
அதே போல காசிக்கு நிகரான, ஏன் காசியை
விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் புதுச்சேரியிலும் உள்ளது.
அந்த கோவில் எங்கு உள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனுர் அருகில் திருக்காஞ்சி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம்.
காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது.
சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு.
இந்த கோவில் சங்கராபரணி நதிக்கரையில் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே நாம் சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு ஒப்பானது என்று அறிந்துகொள்ளலாம் .
இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஐயனை வேண்டினால் பதினாறு செல்வங்களும் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதோடு பூர்வ ஜென்ம பாவ தோசங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்று கூறப்படுகிறது.
இந்த திருத்தலத்தில் சித்தர்களின் சமாதிகள்
பல இருப்பதாக குறிப்புகள் உள்ளன.
இந்த ஸ்தலமானது காசிக்கு நிகராக போற்றப்படுவதற்கு பின் ஒரு புராண
காலத்து கதையும் உள்ளது.
ஒரு சமயம் வேத விற்பன்னர் ஒருவர் தன்னுடைய தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்க புறப்பட்டு சென்றுள்ளார்.
போகும் வழியில் இங்குள்ள இறைவனை தரிசிக்க விரும்பிய அவர் இங்கு வந்துள்ளார். இங்கு வந்ததும் தன்னுடைய தந்தையின் அஸ்தி முழுவதும் பூக்களாய் மாறி உள்ளது.
இதை கண்டு அவர் மெய் சிலிர்த்துள்ளார்.
அஸ்தியை பூக்களாக மாற்றும் சக்தி இந்த தளத்திற்கு உள்ளது என்றால் இது காசியை மிஞ்சும் வகையில் சக்தி பெற்ற ஒரு தலம் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
அந்த சமயம் அவருக்கு, காசியில்
செய்ய வேண்டிய பிதுர் கர்மாக்களை இங்கும் செய்யலாம் என்றொரு அசரீரி கேட்டுள்ளது.
இங்குள்ள சிவலிங்கமானது ஏறத்தாழ 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படுகிறது.
இந்த சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்துள்ளார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ள இந்த தலத்தில் காமாட்சி மீனாட்சி என இரு அம்மன்கள் உள்ளனர்.
இங்குள்ள கருவறையானது தஞ்சை பெரிய கோவிலின் கருவறையை ஒத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














