மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து, ஐ.நா.,வுக்கான அமெரிக்க முன்னாள் துாதரும், அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளவருமான நிக்கி ஹாலே, தனியார் ‘டிவி’க்கு பேட்டி அளித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களை, குறிப்பாக அப்பாவி மக்களை நாம் கவனிக்க வேண்டும். தற்போதுள்ள போர் சூழலை அவர்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் அரபு நாடுகளான லெபனான், ஜோர்டான், எகிப்து ஆகியவை என்ன செய்கின்றன?
எகிப்துக்கு கடந்தாண்டு பல கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளோம். அவர்கள் ஏன் தங்கள் கதவை திறக்கவில்லை? பாலஸ்தீனியர்களை ஏன் ஏற்கவில்லை?ஏனென்றால், ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்களுக்கு அருகில் இருப்பதை இந்த அரபு நாடுகள் விரும்பவில்லை.
அப்படியிருக்கும்போது, இஸ்ரேல் மட்டும் எப்படி தனக்கு அருகில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பதை ஏற்க முடியும்? அதனால் இந்த விஷயத்தில் நாம் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.யார் நல்லவர், யார் கெட்டவர் என்று நம்ப முடியாததால், பாலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு இந்த நாடுகள் விரும்பவில்லை.
ஆனால், தற்போது நடப்பதற்கு இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குற்றம் கூறுவர்.அவர்கள் நினைத்தால், இந்த பிரச்னையை தீர்க்க முடியும். பயங்கரவாதத்தை நிறுத்தும்படி ஹமாஸ் அமைப்புக்கு கூற முடியும்.ஹமாஸ் அமைப்பு மற்றும் அதன் தலைமையுடன், கத்தார் தொடர்ந்து இணைந்து செயல்படுகிறது.
ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் தொடர்ந்து நிதி அளித்து வருகிறது.அதனால், இந்த அரபு நாடுகள் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கின்றன. ஆனால், இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குற்றஞ்சாட்டுகின்றன.காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதை ஹமாஸ் விரும்பவில்லை.
அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். அந்த மக்களையே மனித கேடயமாக பயன்படுத்துகிறது.அதற்கு அந்த மக்கள் அங்கு இருக்க வேண்டும். அப்பாவி மக்களை கொல்கின்றனர் என, இஸ்ரேலுக்கு எதிரான பிம்பத்தை உருவாக்க, அந்த மக்கள் காசாவிலேயே இருப்பதை, ஹமாஸ் விரும்புகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய அட்டூழியங்கள், கொடுமைகளை மறக்க முடியுமா? உயிரை காப்பாற்றிக் கொள்ள பெண் குழந்தைகள் ஓடியதை மறக்க முடியுமா? தொட்டிலிலேயே குழந்தைகள் உயிரிழந்து கிடந்ததை மறக்க முடியுமா? மக்களை சாலைகளில் இழுத்து வந்து, கொடுமைப்படுத்தியதை மறக்க முடியுமா? ஆனால், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக குரல் கொடுக்கின்றனர்.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இருந்து, ஐந்து அமெரிக்கர்களை மீட்பதற்காக, 50,000 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. ஐந்து பேருக்கே இவ்வளவு கொடுத்தால், அத்தனை பேரையும் மீட்க எவ்வளவு கேட்பர்? அமெரிக்கா வலுவாக இருக்க வேண்டும். இஸ்ரேல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.