கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள்.
வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .
சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்….. எங்கும். எதிலும்.
கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..
சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள்.
இதில் அப்படி என்ன இருக்கிறது ?
அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
இ) கங்களி
இன்ன பிற மூலிகைகள்.
பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) பன்னாட்டு கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். மெச்ச வேண்டும்.
எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? அடிப்போம் ?
இந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 25/- முதல் 60/- வரை விற்கிறது. 5 லிட்டர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும்.