மாணவிகள் வீதியில் சண்டை போடும் புதிய கலாச்சாரத்தின் படி, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒழுக்கமாக படிக்க சொன்னா வீதியில் மாணவிகள் அடித்துக் கொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கோவில் திருவிழாக்களில் மேளம் அடிப்பது போல , கோபம் வந்தா மாணவிகள் பஸ்டாண்டில் அடிச்சிக்கிறது தற்போது விபரீத கலாச்சாரமாக மாறி வருகின்றது..!
அண்ணா நகர் கல்லூரி மாணவிகள், வண்ணாரப்பேட்டை அரசு கல்லூரி மாணவிகள் வரிசையில் தமிழ் வளர்த்த மதுரையில் சண்டை வளர்த்த மாணவிகள் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது
எந்த நேரத்தில் அட்லி சிங்கப்பெண்ணே… என்றாரோ தெரியவில்லை, ஏராளமான மக்கள் கூடும் பேருந்து நிலையம் என்று கூட பார்க்காமல், மதுரை மகபூப்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் பசி எடுத்த சிங்கம் போல மோதிக் கொண்டனர்..!
ஒரு மாணவி மற்றொரு மாணவியை ஜடையை பிடித்து கீழே இழுத்து போட்ட… மற்றொரு மாணவியை சிலர் இழுத்துச்செல்ல… பேருந்து படிக்கட்டின் அருகில் ஒரு மாணவியை சிலர் போட்டு மிதித்துக் கொண்டிருக்க… ஏதோ லோ பட்ஜெட் கே.ஜி.எப் படத்தின் காட்சிகளை பார்ப்பது போல இருந்தது
படிக்கின்ற வயதில் ஒழுக்கமும், படிப்பும் இல்லை என்றால் அது ஆணாக இருந்தாலும் ,பெண்ணாக இருந்தாலும் வெத்து தான் என்பது புரியாமல், தாங்கள் தான் கெத்து என்கிற தாதா மனோபாவத்தில் சில மாணவிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்
நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அரசு பள்ளி மாணவிகள் அடித்துக் கொண்ட இந்த சம்பவத்தை தடுக்க ஒருவர் கூட முன்வரவில்லை மாறாக கத்தி கூச்சலிட்டு ரசித்துக் கொண்டிருந்தனர்
இறுதியாக ஒரு மாணவியின் ஜடையை பிடித்து வைத்துக் கொண்டு காலால் எட்டி மித்து தாக்கிக் கொண்டிருந்த மாணவியை , எங்கிருந்தோ ஓடிவந்த மாணவர் தலையில் ஓங்கி அடித்ததும் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகின்றது.
கடந்த 4 நாட்களாக 48 ஆம் நம்பர் பேருந்தில் செல்லும் ஒரு மாணவனை சைட் அடிப்பதில் மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டியால் இந்த கைகலப்பு உருவானதாக கூறப்படுகின்றது.