கோவை அருகேயுள்ள நல்லுார்வயல் கிராமத்தின் பெயரை, ‘காருண்யா நகர்’ என மாற்றியதை கண்டித்து, நேற்று கண்டன பேரணி நடத்தப்பட்டது.
மத போதகர் பால் தினகரன் நடத்தும், காருண்யா கல்வி நிறுவனங்கள், ‘ஏசு அழைக்கிறார்’ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், கோவை நல்லுார்வயல் கிராமத்தில் செயல்படுகின்றன. கடந்த மாதம், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில், பால் தினகரனுக்கு சொந்தமான நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இந்நிலையில், நல்லுார்வயல் கிராமத்தின் பெயரை, ‘காருண்யா நகர்’ என மாற்றியதாக காருண்யா நிர்வாகம் மீது புகார் எழுந்தது. நல்லுார்வயல் தபால் நிலையமாக இருந்ததை, 1995ல், ‘காருண்யா நகர்’ தபால் நிலையமாக மாற்றினர்.அதேபோல், ‘காருண்யா காவல் நிலையம், காருண்யா டெலிபோன் எக்சேஞ்ச்’ என, அரசு நிறுவனங்களின் பெயர்களும் மாற்றப்பட்டதாக, அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.
கிராமத்தின் பெயரையும், கலாசாரத்தையும் மீட்டெடுக்க, கிராம மக்கள், ‘நல்லுார் வயல் பாதுகாப்பு குழு’ என்ற அமைப்பை துவக்கினர். நேற்று மாலை, ஆலாந்துறை பகுதியில் கண்டன பேரணி நடத்தினர். மத்வராயபுரத்தில் திரண்ட மக்கள், நல்லுார்வயல் நோக்கி சென்றபோது, போலீசார் தடுத்து கைது செய்தனர்.
நல்லுார் வயல் பாதுகாப்பு குழுவினர் கூறுகையில், ‘நல்லுார் வயல் கிராமத்தின் பெயரை, காருண்யா நகர் என மாற்றியுள்ளனர். இங்குள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் பெயர்களும், காருண்யா நகர் என மாற்றப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தின் பெயரை மாற்றுவது, அந்த கிராமத்தை அழிப்பதற்கு சமம்.’கிராமத்தின் கலாசாரம், வாழ்க்கை முறை புதைக்கப்படும். காருண்யா நகர் என்ற பெயரை மீண்டும் நல்லுார் வயல் என மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
நல்லுார் வயல் என, அரசு அலுவலகங்கள் மற்றும் பஸ்களில் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
மத்வராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில், ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும், ‘காருண்யா நகர்’ என்ற பெயரை மாற்றி, நல்லுார் வயல் என, மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமம் துவங்கும் இடத்தில், நல்லுார் வயல் கிராமத்தின் பெயர் பலகையும் வைக்கப்பட்டது.