மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே சமீப காலமாக பா.ஜ.க-வுடன் நெருக்கமான உறவை கடைப்பிடித்து வருகிறார். சிவசேனா கூட்டணியை முறித்துக்கொண்டிருப்பதால் அதற்கு மாற்றாக ஒரு கட்சி தேவை என்பதால் பா.ஜ.க ராஜ்தாக்கரேயை துணைக்கு அழைத்துக்கொண்டுள்ளது. ராஜ்தாக்கரே மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகளை உடனே அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆற்றிய உரையில் கூறுகையில், “எந்த மதத்தின் பிரார்த்தனையையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகளை மாநில அரசு அகற்றவில்லையெனில் எங்களது கட்சி தொண்டர்கள் மசூதிகளுக்கு வெளியில் ஒலி பெருக்கியை வைத்து ஹனுமான் பாடல்களைப் பாடுவார்கள்.
மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கிகளுக்கு என்ன தேவை இருக்கிறது. நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் கிடையாது. மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருக்கும் குடிசைகளில் என்ன நடக்கிறது என்று மும்பை போலீஸாருக்கு தெரியும். அப்பகுதியில் ரெய்டு நடத்தவேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். எம்.எல்.ஏ-க்கள் மும்பை குடிசை முஸ்லிம்களை வாக்குவங்கியாக பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு ஆதார் கார்டு கூட கிடையாது. நமது எம்.எம்.ஏ-க்கள் அவர்களுக்கு அவை கிடைக்க உதவுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் சாதிரீதியாக மகாராஷ்டிரா மக்களை பிரித்துள்ளது. நாம் இந்த சாதிப்பிரச்னையிலிருந்து விடுபடாவிட்டால் நாம் எப்படி இந்துக்களாக மாற முடியும்
உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது போன்ற ஒரு முன்னேற்றம் மகாராஷ்டிராவிலும் ஏற்படவேண்டும். நான் அயோத்திக்கு செல்வேன். ஆனால் எப்போது என்று இப்போது சொல்ல மாட்டேன்.
மகாராஷ்டிராவில் மக்கள் அளித்த தேர்தல் முடிவுகளுக்கு மாறாக உத்தவ்தாக்கரே எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரத்தின் போது தேவேந்திர பட்நவிஸ் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தபோது. உத்தவ்தாக்கரே ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசவில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுதான் உத்தவ்தாக்கரேவுக்கு முதல்வராகும் ஆசை ஏற்பட்டது. எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுக்கு கொடுக்கப்படும் பென்சனை ரத்து செய்யவேண்டும். எம்.எல்.ஏ-க்களுக்கு ஏன் வீடு கொடுக்கவேண்டும். அப்படி அவர்களுக்கு வீடு கொடுப்பதாக இருந்தால் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் வீடு கொடுக்கவேண்டும். எம்.எல்.ஏ-க்களுக்கு வீடு கொடுத்தால் அவர்களின் பண்ணை வீடுகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தார். இதற்கிடையே ராஜ்தாக்கரேயை பா.ஜ.க-வின் மூன்றாவது அணி என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
Source, Image Courtesy: Vikatan