ஹிந்து என்று சொல்லி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதோடு, தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக இஸ்லாமிய வாலிபர் மீது மலேசியாவைச் சேர்ந்த ஹிந்து பெண் நெல்லை போலீஸில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் சுப்பையா. இவர், தற்போது குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். இவரது மகள் கவிதா. இவர்தான் நெல்லை டவுன் சிக்கந்தர் தெருவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரில் கவிதா கூறியிருப்பதாவது:- “நெல்லையைச் சேர்ந்த இம்ரான் என்பவர், மலேசியாவில் வேலை பார்த்து வந்தார். அப்போது, எனது தோழியின் திருமணத்தில் எனக்கு இம்ரானின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் தான் ஒரு ஹிந்து என்றும், தனது பெயர் அருண்குமார் என்றும் கூறினார்.
இதன் பிறகு, இருவரும் பேஸ்புக் மூலம் பழகி வந்தோம். காலப்போக்கில் எங்களது பழக்கம் காதலாக மாறியது. இதன் பிறகுதான், இம்ரான் ஹிந்து அல்ல, இஸ்லாமியர் என்பது தெரியவந்தது. எனவே, அவரிடமிருந்து விலக நினைத்தேன். இதனிடையே, ஒரு நாள் இம்ரான் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். மேலும், முஸ்லீமான நான் உனக்காக ஹிந்துவாக மதம் மாறி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். இதையடுத்து, தான் ஹிந்து மதத்திற்கு மாறி விட்டதாகவும், தனது பெயரை தருண் என்று மாற்றிக் கொண்டதாகவும் பல்வேறு சான்றிதழ்களை காட்டி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சினார்.
இதை நம்பி நானும் 30.10 2019 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கோயிலில் வைத்து இம்ரானை திருமணம் செய்து கொண்டேன். பிறகு, திருமணத்தை பதிவு செய்யும்படி கூறினேன். அதற்கு, துபாயில் முக்கிய வேலை இருப்பதாகவும், பின்னர் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு இம்ரானுடன் துபாய் சென்று விட்டேன். இதன் பிறகுதான், இம்ரான் போலியாக பெயர் மாற்றம் செய்ததும், பிறப்புச் சான்றிதழ் உட்பட பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்திருப்பதும் தெரியவந்தது. ஆனால், இதையெல்லாம் மறைத்து என்னை ஏமாற்றி பலமுறை உடலுறவு மேற்கொண்டார்.
இதன் விளைவாக தற்போது நான் 6 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இதுகுறித்து கேட்டபோது பணத்திற்காகத்தான் உன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியதோடு, இம்ரானின் பித்தலாட்டம் முழுவதும் எனக்கு தெரியவந்து விட்டதால், என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். தற்போது, அவரது சகோதரியும், தாயாரும் என்னை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டுகின்றனர். மேலும், இம்ரான் என்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார். எனவே, இம்ரான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இப்புகாரின் அடிப்படையில் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இம்ரான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது வரை இம்ரான் கைது செய்யப்படவில்லை. எனவே, தனக்கு நீதி கேட்டு நெல்லை மாவட்ட கலெக்டம் நேற்று மனு அளித்திருக்கிறார் கவிதா. அப்போது அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் ஒரு ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்தவள். இஸ்லாமியரான இம்ரான் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். மேலும், போலியாக ஆவணங்கள் தயார் செய்து ஹிந்து மதத்திற்கு மாறியதாக பொய் கூறினார். என்னிடமிருந்து இதுவரை 14 லட்சம் ரூபாய் பணம் பெற்றிருக்கிறார். என்னைப் போன்றே இம்ரான் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். எனவே, இம்ரானை உடனடியாகக் கைது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
நன்றி மீடியான்.