மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார் எனவும், மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
அருணகிரிநாதருக்கு பிறகு மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்ந்து திமுக மற்றும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்து சமய அறநிலையத்துறை குறித்து கடுமையான விமர்சனங்களை மதுரை ஆதீனம் முன்வைத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக, தமிழத்தில் உள்ள கோவில்களை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டுமெனவும் ஆதீனம் கூறியிருந்தார். மதுரை ஆதீனத்தின் இந்தப் பேச்சு குறித்து பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ,’மதுரை ஆதீனம் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக பேசி வருவதாகவும், தமிழகத்தில் ஆதினங்கள் தமிழக அரசுக்கு ஆதரவாக இல்லை என்று தோற்றத்தை உருவாக்க நினைப்பதாகவும், மதுரை ஆதீனம் இதேபோல் தொடர்ந்து பேசி வந்தால் பதில் சொல்வதற்கு பல வழிகள் இருக்கிறது என்று கூறினார்…ட
அண்ணாமலை எச்சரிக்கை
திருச்சியில் பாஜகவின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாப புது காஸ்டியூம் போட்டுள்ளார். மீண்டும் காவி வேட்டி கட்ட துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
ஊழல் குற்றச்சாட்டு
சிதம்பரம் கோவில் விவகாரத்திலும் அமைச்சர் சேகர் பாபு தலையிடுகிறார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் போட்டிபோட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். நியூட்ரீசன் திட்டத்தில் கமிஷன் நடைபெற்றுள்ளது. அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திமுக வளர்ந்துள்ளது.’ என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















