தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையமான ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை புதுடெல்லி ராஜ்காட்டில் காந்தி ஸ்மிர்தி மற்றும் தரிசன சமிதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதற்கான திட்டத்தை 2017 ஏப்ரல் 10 ஆம் தேதி பிரதமர் திரு. மோடி இதை அறிவித்தார்.
காந்திஜியின் சம்பரண் சத்யாகிரகத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது இதுகுறித்து அவர் அறிவிப்பு வெளியிட்டார். ஜல சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், ஜல சக்தி இலாகா இணை அமைச்சர் ஸ்ரீ ரத்தன்லால் கட்டாரியா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திரா ஒரு பார்வை
ஆர்.எஸ்.கே. எனப்படும் இந்த மையத்தில் தூய்மையான பாரதம் திட்டத்தின் பல நிலைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. 2014ஆம் ஆண்டில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தும் நிலையில் இருந்து யாருமே திறந்தவெளிக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற நிலையை 2019இல் எட்டியது வரையிலான மாற்றங்கள் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன. ஆர்.எஸ்.கே.வின் மூன்று தனித்துவமான பகுதிகளை பிரதமர் பார்த்தார். ஹால் 1-இல் உள்ள தனித்துவமான 360 டிகிரி காணொளிக் காட்சியைப் பார்த்தார். தூய்மையான பாரதம் திட்டத்தின் வளர்ச்சியின் அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. பிறகு 2வது ஹாலுக்கு சென்றார். அங்கு கலந்தாடல் செய்யும் வகையிலான எல்.இ.டி. பலகைகள், ஹோலோகிராம் பெட்டிகள், கலந்தாடல் முறையிலான விளையாட்டுகள் ஆகியவையும், தூய்மையான பாரதம் திட்டத்தின் பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. ஆர்.எஸ்.கே. அருகில் புல்வெளியில் நிறுவி இருந்த அம்சங்களையும் பிரதமர் பார்த்தார். மகாத்மா காந்தி தலைமையில் தூய்மை உறுதி மொழி ஏற்றல், ஜார்க்கண்ட் கிராமப்புற ராணி மிஸ்ட்ரிகள், தூய்மையான பாரதம் திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழந்தைகளைக் குறிக்கும் வகையில் 3 காட்சி அரங்குகள் அங்கே அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கூட மாணவர்களுடன் கலந்துரையாடல்
ஆர்.எஸ்.கே. முழுவதையும் பார்வையிட்ட பிறகு, ஆர்.எஸ்.கே. சிறப்பு மலர் பகுதியை பிரதமர் சிறிது நேரம் பார்த்தார். டெல்லியில் இருந்தும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 36 பள்ளி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். ஆர்.எஸ்.கே.வின் அரங்கில், தனி நபர் இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றி இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கள் வீடு மற்றும் பள்ளிக்கூடங்களில் தூய்மையான சூழல் ஏற்படுத்துவதில் தங்கள் அனுபவங்களை மாணவர்கள் பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். ஆர்.எஸ்.கே. பற்றிய தங்களது கருத்துகளையும் அவர்கள் தெரிவித்தனர். ஆர்.எஸ்.கே.வில் பிரதமருக்குப் பிடித்த பகுதி எது என ஒரு மாணவர் கேட்டார். மகாத்மா காந்தியின் சிந்தனையாக தூய்மையான பாரதம் திட்டம் உள்ளதை விவரிக்கும் பகுதி தமக்கு மிகவும் பிடித்திருப்பதாக பிரதமர் பதில் அளித்தார்.
பிரதமர் உரை
பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றினார். தூய்மையான பாரதம் திட்டம் கடந்து வந்த பாதையை பிரதமர் சுருக்கமாக எடுத்துரைத்தார். ஆர்.எஸ்.கே. மையத்தை மகாத்மா காந்திக்கு நிரந்தரப் புகழ் சேர்க்கும் மையமாக அர்ப்பணிப்பதாக அவர் கூறினார். தூய்மையான பாரதம் என்பதை மக்கள் இயக்கமாக மாற்றியதற்காக மக்களுக்குப் பாராட்டு தெரிவித்த அவர், வரக் கூடிய காலங்களிலும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நம்முடைய தினசரி வாழ்க்கையில், குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராகப் போரிடக் கூடிய இன்றைய சூழ்நிலையில் தூய்மையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தத் தருணத்தில் `காண்டகி முக்த் பாரத்’ என்ற ஒரு வார கால திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். சுதந்திர தினம் வரையில் தூய்மைப்படுத்தும் பணிகள் இத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும். நகர்ப்புற, கிராமப்புற இந்தியாவில் இந்த மக்கள் இயக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில், தூய்மைக்கான சிறப்பு முன்முயற்சிகள் எடுக்கப்படும்.
ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை பார்வையிடுதல்
ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திரா ஆகஸ்ட் 9 ஆம் தேதியில் இருந்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். அப்போது தனி நபர் இடைவெளி மற்றும் ஆரோக்கிய நடைமுறைகளைப் பின்பற்றி, பொது மக்கள் இதைப் பார்வையிடலாம். குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில் இந்த மையத்தைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், இப்போதைக்கு மாணவர்கள் வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்படாது. இருந்தபோதிலும் அதுவரையில் ஆர்.எஸ்.கே.வை மெய்நிகர் பயணமாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். முதலாவது மெய்நிகர் பயணத்திற்கு ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்படும். ஜல சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அதில் பங்கேற்பார். ஆர்.எஸ்.கே. குறித்த தகவல்கள் மற்றும் டிக்கெட் பதிவுகளுக்கு பின்வரும் இணையதளத்தை நாடலாம்: rsk.ddws.gov.in