ஈ-சஞ்சீவனி வெளிநோயாளிகள் பிரிவில் முன்னாள் ராணுவ மருத்துவர்கள் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்குவார்கள். நாட்டின் தேவையைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு உதவுவதற்காக முன்னாள் மருத்துவர்கள் தாமாக முன்வந்திருக்கிறார்கள்.
பாதுகாப்புச் செயலாளர் டாக்டர். அஜய் குமார் மற்றும் பாதுகாப்புப் படைகள் மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநர் மருத்துவர் வைஸ் அட்மிரல் ரஜத் தத்தா ஆகியோர் மருத்துவச் சேவைகளை வழங்க முன் வந்துள்ள முன்னாள் மருத்துவர்களிடம் காணொலி மூலம் 2021 மே 7 அன்று உரையாற்றினர்.
https://esanjeevaniopd.in/ எனும் முகவரியில் மக்கள் அனைவரும் இந்த சேவைகளைப் பெறலாம்.
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேம்பட்ட கணினியியல் வளச்ர்சி மையம், மொஹாலியால் உருவாக்கப்பட்ட ஈ-சஞ்சீவனி வெளிநோயாளிகள் பிரிவு, அரசின் முன்னணி தொலை மருத்துவத் தளமாகும். நாட்டு மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வரும் இந்தத் தளம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
ஆனால், கொவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. கொவிட் வார்டுகளுக்கு மருத்துவர்கள் சென்று விடுவதால், முன்னாள் ராணுவ மருத்துவர்களின் சேவை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இன்னும் அதிக அளவில் முன்னாள் ராணுவ மருத்துவர்கள் இச்சேவையில் தங்களை இணைத்துக் கொள்ள உள்ளனர். இதன் மூலமாக தற்போதைய சூழ்நிலையில் வீட்டிலிருந்தவாறே மக்களால் மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியும்.