எல்லையில் எந்த சவாலையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றலும், துணிச்சலும் நமது படை வீரர்களுக்கு உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
லடாக்கில் சீன எல்லைப் பகுதியில் நிலவும் சூழல் குறித்து, மாநிலங்களவையில் அறிக்கை அளித்த அவர், லடாக்கில் சவாலை சந்தித்து வருவது உண்மைதான் என்றும், அதேசமயம், நமது நாட்டை ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உறுதியை இந்த அவையின் மூலம் நாட்டின் 130 கோடி மக்களுக்கு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி, கல்வான் பகுதியில், நமது தாய்நாட்டின் பாதுகாப்புக்காக கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் 19 வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ததைச் சுட்டிக்காட்டிய அவர், நமது பிரதமர் ,லடாக் சென்று, நமது துணிச்சல்மிக்க வீரர்களைச் சந்தித்த பின்னர் அவர்களது ,மன உறுதி அதிகரித்துள்ளது என்றார். அவர்களைச் சந்தித்த பின்னர், அவர்களது துணிச்சலையும், மன உறுதியையும் தாமும் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவும், சீனாவும் தங்களது எல்லைப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணவில்லை என்று கூறிய அவர், இரு நாடுகளும் இதற்காக நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று தெரிவித்த அவர், மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை “சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ன்” படி பாகிஸ்தான் சீனாவுக்குசட்ட விரோதமாக கொடுத்துள்ளது என்றும் கூறினார். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா கிழக்கு எல்லைப் பகுதியில் சுமார் 90,000 ச.கி.மீ பகுதியும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடுவதாக அவர் கூறினார்.
எல்லைப் பிரச்சினை மிகவும் சிக்கலானது என்பதால், அதனை பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்கு பொறுமை மிகவும் அவசியம் என இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன என்ற போதிலும், இருதரப்புக்கும் பொதுவான உண்மையான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) இல்லாததால், எல்லையில் அமைதியைப் பராமரிக்க பல்வேறு உடன்படிக்கைகளை இருநாடுகளும் வகுத்து, நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
1993 மற்றும் 1996 உடன்படிக்கைகளின்படி, எல்ஏசி நெடுகிலும், இருதரப்பு பகுதியில் குறைந்தபட்ச அளவுக்கு தங்கள் படைகளை நிறுத்திக்கொள்ளலாம் என்றும், எல்ஏசி-யை இருதரப்பும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்புகொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
ஆனால், இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில், கல்வான் பள்ளத்தாக்கில் நமது படைகள் வழக்கமான ரோந்து மேற்கொள்ள சீனப்படையினர் இடையூறு செய்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்றும், மே மாத மத்தியில், மேற்கு பகுதியில் கொங்கா லா, கோக்ரா, பான்காங் ஏரியின் வடகரை ஆகிய இடங்களில், சீனத்தரப்பு நமது எல்லைக்குள் ஊடுவ பல முறை முயற்சிகள் மேற்கொண்டன என்றும் கூறிய திரு. ராஜ்நாத் சிங், இந்த முயற்சிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து நமது ஆயுதப்படையினர் உரிய முறையில் பதிலடி கொடுத்ததாகக் கூறினார்.
எல்லையில் தற்போதைய நிலையை மாற்ற சீனா ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்கத்தக்கதல்ல என்று அந்நாட்டுக்கு ராஜியரீதியாகவும், ராணுவ வழியிலும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது என்ற தகவலையும் அவர் அவைக்குத் தெரிவித்தார்.
தற்போதைய நிலைக்கு தீர்வு காண சீனத்தரப்புடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாகவும், இரு தரப்பும் எல்ஏசியை மதித்து நடக்க வேண்டும், தற்போதைய நிலையை மாற்ற எந்தத் தரப்பும் தன்னிச்சையாக முயலக்கூடாது, அனைத்து உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற மூன்று கொள்கைகள் வலியுறுத்தப்பட்டன என்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, ஆகஸ்ட் 29, 30 இரவில் சீன ராணுவம் பான்காங் ஏரியின் தென்கரைப் பகுதியில் மீண்டும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், ஆனால், நமது படையினர் சரியான முறையில் செயல்பட்டு அந்த முயற்சிகளை முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் இந்த நடவடிக்கைள் 1993, 1996 உடன்படிக்கைகளை மீறுவதாக அமைந்திருந்தன என்று அவர் கூறினார்.
எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான வழியில் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மேற்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கூறிய திரு. சிங், கடந்த 4-ம்தேதி சீனப் பாதுகாப்பு அமைச்சரை மாஸ்கோவில், சந்தித்து விரிவான விவாதம் நடத்தியதாகவும், அதில், இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்ததாகவும் கூறினார். வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கரும், மாஸ்கோவில் சீன வெளியுறவு அமைச்சரை கடந்த 10-ம்தேதி சந்தித்து பேசியுள்ள விவரங்களை அவர் கூறினார்.
நமது வீரர்களின் தீரத்தின் மீது இந்த அவை முழு நம்பிக்கை வைத்துள்ளது என்பதை காட்ட, இந்த அவை ஒன்றிணைந்து நமது படையினரைக் கவுரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு. ராஜ்நாத் சிங், இந்த ஒற்றுமை உணர்வு செய்தி நாடு முழுவதும் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதிலும் அதிர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.