தமிழை தாய்மொழியாக கொண்டிராத 10ம் வகுப்பு சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து இந்த ஆண்டும் விலக்கு அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 26-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வை 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவ – மாணவிகள் எழுதவுள்ளனர். ஏற்கனவே 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதால், தற்போது பல பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு படிப்பதற்காக அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்நிலையில் தான் சிறுபான்மை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்க வேண்டும். மாறாக அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
மேலும் தமிழை கட்டாய பாடமாக்குவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்து இருந்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப்போது இந்த ஆண்டும் சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10ம் வகுப்பு படிக்கம் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்க தமி் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வரும் 26ம் தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் இருந்தே விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்க நடப்பு ஆண்டு மட்டும் பொருந்தும். தமிழ் தேர்வுக்கு பதிலாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய சிறுபான்மை பிரிவு மாணவர்கள் அவர்களுடைய மொழி பாடத்தை தேர்வாக எழுதி கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 10 ஆயிரம் மாணவர்கள் வரை தமிழ் மொழி பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.