டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை பளுதூக்கும் வீராங்கனை சைகோம் மீராபாய் சானு வென்றுள்ளார்.49 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை நான்கு முயற்சிகளில் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதேநேரத்தில் சீன வீராங்கனை ஹூ சிகு 94 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றார். அவர் ஒலிம்பிக்கில் புதிய சாதனையையும் படைத்துள்ளார். இரண்டாமிடம் பெற்ற இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கமாகும்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு 2017ஆம் ஆண்டு உலகச் சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கங்கள் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 -ன் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
“டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020-ற்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான துவக்கத்தை கோரியிருக்க முடியாது. மீராபாய் சானுவின் மாபெரும் செயல்திறனால் இந்தியா குதூகலம் அடைந்துள்ளது. பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது. #Cheer4India #Tokyo2020”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தமது ட்விட்டரில், 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது பெருமிதம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.