இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், ஆளே இல்லாமல் பூமிக்கு திரும்புகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சிக்கலில் உள்ள போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விட்டுவிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ், 58, புட்ச் வில்மோர், 61, ஆகியோர் கடந்த ஜூன் 5ல் சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். ஜூன் 7ல் பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றடைந்தனர்.
அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது.
தற்போது 90 நாட்களுக்கு மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை அழைத்து வர நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது. அந்நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்து வர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்கு செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை விண்வெளிக்கு ஏற்றிச் சென்ற அந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலன், ஆளே இல்லாமல் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இது மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் தரையிறங்க உள்ளது. ஸ்டார்லைனர் விண்கலம் பூமியில் தரையிறங்கியதும் எப்படி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்று ஆய்வு செய்யப்படும்.
நீண்ட காலமாக போராடியும் ஏன் பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை என்பது குறித்து போயிங் நிறுவனம் ஆய்வு நடத்தும்.இப்படி திட்டம் சொதப்பியதால், விண்வெளிக்கு வீரர்களை தொடர்ந்து அனுப்பும் நாசா திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, விண்வெளித்துறையில் தடம் பதிக்க ஆசைப்பட்ட போயிங் விமான நிறுவனத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களின் வழக்கமான பயணத்திற்கு நாசாவின் வணிகக் குழு திட்டத்தில் போயிங் நிறுவனம் அனுமதி பெற வேண்டும். இப்போது ஸ்டார்லைனர் பூமிக்கு திரும்பியதும், இந்த பயணம் தொடர்பான அனைத்து தரவுகளும் ஆய்வு செய்யப்படும். நாசா சான்றிதழைப் பெற வேறு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் போயிங் நிறுவனம் முடிவு செய்யும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















