கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டுவது குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ‛கூடிய விரைவில் தமிழ்நாடு என்னும் பெயரை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றுவர்’ என நக்கலாக பதிலளித்துள்ளார்.
‛‛சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை (இ.சி.ஆர்) இனி, ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என பெயர் சூட்டப்படும்,” என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று (மே 1) அறிவித்தார். இது தொடர்பாக சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: இ.சி.ஆர் என்பது புகழ்பெற்ற சாலை. அதற்கு கருணாநிதி பெயர் சூட்டுவது ஏற்புடையது அல்ல.
இது அவர்களுடைய அரசு. ஆட்சி அதிகாரம் அவர்களிடத்தில் இருப்பதால் புதிய திட்டங்களுக்கு அவருடைய பெயர் வைக்கலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இ.சி.ஆர் என்னும் அழகான பெயரை மாற்றி கருணாநிதியின் பெயர் சூட்டுவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். போகிற போக்கை பார்த்தால் கூடிய விரைவில் தமிழ்நாடு என்னும் பெயரை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றுவர் என நினைக்கிறேன். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.