தேனி மாவட்டம் போடியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை. இது தொடர்பாக தவறான கருத்துக்களை பரப்பி விடுகின்றனர். கூட்டணி கட்சிகளை அவர்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பது எங்கள் கடமை என்று கூறினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறாரா? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு ஆமாம் போட்டியிடுகிறார். இல்லை போட்டியிடவில்லை என்று நேரடியாக பதில் கூறாமல், அதுக்கு இது பதில் இல்லையே, என்ற பாணியில் மு.க.ஸ்டாலின் பதில் கூறினார்.
அப்போது கூறிய அவர், ”திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படித்தான் கட்சியில் வாய்ப்பை பெற்றேன். திமுகவை குறை சொல்பவர்கள்தான் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று சொல்லி வருகின்றனர்” என்று தெரிவித்தார். அவரது பதிலைக் கேட்டவர்கள், அதுசரி, கட்சிக்காக 50 வருஷமா உழைச்சவன்லாம் இன்னும் தொண்டனாவே இருக்கப்ப, கட்சிக்குள்ள நுழைந்ததுமே இளைஞர் அணித்தலைவர், வருங்கால முதல்வர்னு அவரு பையனால மட்டும்தான் வர முடியுது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்!