சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் பிறக்கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்றும், அதிமுக தலைமை தான் தொடரும் என்றும் திட்டவட்டமாக கூறினார். அதேபோன்று அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்ற அமைச்சர், அவரை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளே கூட்டணியில் இருக்கும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவிற்கு ஆட்சிக்கு வருவது என்பது எட்டாத கனி என்றும் முக ஸ்டாலினின் கனவு கானல் நீராக தான் போகும் என விமர்சித்தார். அதுமட்டுமின்றி, ஸ்டாலினால் என்றைக்கும் முதலமைச்சராக முடியாது என்று அவரது அண்ணன் மு.க.அழகிரியே விமர்சித்ததாக கூறிய அமைச்சர், ஸ்டாலின் கனவும் முடிந்து போன அத்யாயம் என்றார்.
திமுகவினர் யோகா கலை செய்து காட்டுவதாகவும் மக்கள் கிராம சபை என்ற பெயரில் மரத்தடியில் அமர்ந்து ஸ்டாலின் யோகாசனம் செய்வதாகவும் அமைச்சர் சாடினார். திமுக கட்சி வெடிக்கும் தருணம் வந்துவிட்டதாகவும், ஆயுள் முழுக்க போஸ்டரில் மட்டுமே ஸ்டாலினால் முதலமைச்சராக முடியும் எனக்கூறினார். மேலும், தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் அறிமுகம் செய்தது திமுக தான் என்றுதுடன் ஸ்டாலின் உத்தமர் போல் பேசுவதை மக்கள் நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.