பிரதமர் மோடி தலைமையிலான மத்தியரசு தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில், உணவு பதப்படுத்தும் தொழில் சார்ந்த 8 திட்டங்களுக்கு, மத்திய உணவு பதப்படுத்துதல், தொழில்துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தலைமையில் நடைபெற்ற மத்திய அரசின் பல்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுதில்லியில் புதன் அன்று நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில், உணவு பதப்படுத்தும் தொழில்துறையின் கிசான் சம்பத யோஜனா திட்டத்தின், உணவு பதப்படுத்தும் தொகுப்புத் திட்டத்தின்கீழ், சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில் வளாகங்கள் அமைக்கப்படுவதன் மூலம் தமிழகத்தின் கிராமப்புறங்களில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படும்.
சுமார் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், இந்தத் தொழில் வளாகங்கள் அமைக்கப்படும் பகுதியைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் விவசாயிகளும் பயனடைவார்கள்.
உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கென மாநில அளவில் தனியாக ஒரு கொள்கையை உருவாக்கியிருப்பதுடன், உணவு பதப்படுத்தும் தொழில்களை அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள், மனநிறைவளிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை தெரிவித்துள்ளது.
மேலும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்குமாறு வேளாண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவதிலும், மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெற்றுத் தருவதிலும், தமிழக அரசின் பணிகளை, இத்துறை பாராட்டியுள்ளது.
தமிழகத்தில் அமைக்கப்படும் 8 தொழில் திட்டங்கள் உட்பட மொத்தம் ரூ.301.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.67.29 கோடி வழங்கவும் நேற்றைய கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 207 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.
உணவு பதப்படுத்தும் தொழில்துறை மூலம், இத்தொழில் துறையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
இத்தொழில்துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதுடன், அறுவடைக்குப் பிந்தைய மதிப்புக்கூட்டு நடவடிக்கைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை வர்த்தகம் மேற்கொள்ளும் தொழிற்சாலைகளுக்கு, லாபத் தொகையில் 100 சதவீத வருமானவரி விலக்கும் அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















