விவசாயிகளுக்கு மோடி நேரடியாக தரும் பணம்….
பிஎம் – கிசான் என்று அழைக்கப்படும் பிரதமரின் விவசாயி திட்டம் நாடு முழுவதும் விவசாயிகளிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாயி (பிஎம்-கிசான்) திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூ. 6 ஆயிரம் நிதி உதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
விவசாயிகளுக்குக் கடன் அளித்து விட்டு அதைத் தள்ளுபடி செய்வதை விட அவர்களுக்கு உதவித்தொகையாக அளித்தால் அரசுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்று வேளாண் நிபுணர்களால் கூறப்பட்டு வந்தது.
இதையடுத்து 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அதனை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு 2019-20-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி செய்வதாக அறிவித்தது.
இந்த நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகள் 2 ஹெக்டேருக்கு குறைவாக அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்க வேண்டும் என முதலில் நிபந்தனை விதிக்கப்பட்டது. பின்னர் இது அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது.
மத்திய அரசிடமிருந்து நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் இந்த நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
75,000 கோடி ஒதுக்கீடுபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதியாண்டில் ரூ.75,000 கோடியும், 2018-2019 நிதியாண்டில் ரூ.20,000 கோடியும் ஒதுக்கியது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்தத் திட்டம் நாட்டின் பெரும்பாலான விவசாயிகளிடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதால் விவசாயிகள் சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள் வாங்குவதற்கு இந்த நிதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்மூலம் அவர்கள் விவசாயத்துக்கு சிறிய அளவிலான கடன் வாங்குவது தடுக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் (ஐஎப்பிஆர்ஐ) -இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் ஐஎப்பிஆர்ஐ-ஐசிஏஆர் இணைந்து ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டைக் கடந்துள்ள நிலையில் நாடு முழுவதும் திட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்த தமிழக விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 35 லட்சம் பேர்.