சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பிரதமா் இரவு தங்கினாா். அங்கு பாஜக நிா்வாகிகளைச் சந்தித்தாா். மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை மற்றும் மூத்த நிா்வாகிகள் அதில் பங்கேற்றனா். தமிழக அரசியல் நிலவரம், பாஜகவின் வளா்ச்சி குறித்து ஆலோசித்தாா். இந்த ஆலோசனை அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் தமிழக பாஜத தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை தமிழக அரசு மிக சிறப்பாக செய்தது. இதில் தமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டு தொன்மை பிரதிபலிக்கப்பட்டது ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன்.
செஸ் ஒலிம்பியாட் விழா மூலமாக இந்தியாவையும் நமது கலாசாரத்தையும் பெருமைப்படுத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் மு,க.ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் என அண்ணாமலை கூறினார்.மேலும், பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனையில் அரசியல் பேசப்படவில்லை. தமிழக முதல்வர், முதல்வராக நடந்துகொண்டார். அவருக்கு பாராட்டுகள். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காக முதல்வரை பாராட்டுகிறோம். அதற்காக, திமுக-பாஜக கூட்டணியா என கேட்டால் இல்லை.
பாஜக கொள்கை ரீதியாக செல்லக்கூடிய கட்சி, பாஸ்போர்ட் விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முறையான விசாரணை நடத்தினால், இதில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும்.உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அடுத்தடுத்து வரக்கூடிய நிகழ்வுகளுக்கு இந்தத் தீர்ப்புக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்று அண்ணாமலை கூறினார்.