கேரள அரசுக்கு புதிய தமிழகம் கட்சி கண்டனம்
இன்று காலை 11:30 மணிக்கு, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுடனான காணொளி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் பின்வருமாறு :
1) 06.08.2020 அன்று, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் மண்சரிவால் உயிரிழந்த தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 83 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
2) இன்று (09/08/2020) மாலை 06.30 மணியளவில் உயிரிழந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடைய பூர்விகக் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு-பாரதி நகர், தலையால்நடந்தான்குளம்; ஒட்டப்பிடாரம்-கோவிந்தாபுரம்; மானூர்-நடுபிள்ளையார்குளம்; வாசுதேவநல்லூர்-இரத்தினபுரி; புளியங்குடி ஆகிய கிராமங்களிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.
3) விபத்திற்குள்ளான அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த, 30 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேரும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் கூட, உண்மையைச் சொல்வதற்கு கேரள அரசு தயக்கம் காட்டுவது நியாயமில்லை. இறந்தவர்களின் பிரேதங்களை மீட்பதற்கு எவ்வித தீவிர நடவடிக்கையும் மேற்கொள்ளாததை புதிய தமிழகம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
4) டாடா நிறுவனம்-கண்ணந்தேவன் தேயிலைத் தோட்ட டிவிஷன் கீழ் இயங்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்ட வீடுகளே இவ்வளவு உயிரிழப்பிற்கும் காரணம் ஆகும். எனவே, டாடா நிறுவனம்-கண்ணந்தேவன் தேயிலைத் தோட்ட டிவிஷன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுகிறேன்.
5) ஆறு தலைமுறைகளாக, 180 ஆண்டுகாலமாக, தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்து வரக்கூடிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களால் அந்த நிர்வாகம் கோடான கோடி இலாபம் ஈட்டியிருக்கிறது. எனினும் இந்த நிமிடம் வரையிலும் டாடா நிர்வாகத்திடமிருந்து உயிரிழந்தவர்களை மீட்பதற்கு உண்டான எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை, எவ்வித நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. இந்த மனிதநேயமற்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 இலட்சம் உடனடியாக வழங்க வேண்டும் என டாடா நிறுவனத்தை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
6) கேரள அரசு, வெறுமனே கண்துடைப்புக்காக ரூபாய் 2 இலட்சம் அறிவித்திருக்கிறது. விமான விபத்தில் இறந்தால் ரூபாய் 10 இலட்சம்; ஆனால், தங்கள் மாநிலத்திற்கு வருமானத்தை ஈட்டித் தந்த தொழிலாளர்கள் இறந்தால் ரூபாய் 2 இலட்சம் தானா? எனவே, கேரள அரசு எவ்வித பாகுபாடும் காட்டாமல், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூபாய் 50 இலட்சம் அறிவிக்க வேண்டும்.
7) தமிழ், தமிழர் என்ற அடிப்படையில் ஆட்சி செய்வதாக கூறக்கூடிய தமிழக அரசு, தமிழ்நாட்டின் எல்லையான உடுமலை-சின்னாறு பகுதியிலிருந்து 10-15 கிமீ தொலைவில் மூணாறு எஸ்டேட்டில் 83 தமிழர்கள் உயிரிழந்தும் கூட, அவர்களுடைய பிரேதங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கோ, அவர்கள் உற்றார், உறவினர்கள் தமிழகத்திலிருந்து சென்று நல்லடக்கம் செய்வதற்கோ, சேற்றிலும், சகதியிலும் சிக்கியுள்ள அவர்களுடைய உடல்களை மீட்பதற்கோ கள அளவில் நடவடிக்கை எடுக்காமல், கடந்த மூன்று தினங்களாக வெறும் வார்த்தை ஜாலங்களால் பேசி வருவது தமிழக மக்களிடத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவர்களது உற்றார் உறவினர்களின் கோரிக்கைகளான இ-பாஸ் பெறுவது முதல் உடலை தமிழகம் கொண்டுவருவது வரை தமிழக அரசு, கேரள அரசுடன் இணைந்து செயல்பட்டு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு புதிய தமிழகம் கட்சி கேட்டுக்கொள்கிறது.
8) மத்திய அரசும் 83 பேருடைய உயிரிழப்பில் குறைந்தபட்சம் இறந்தவர்களின் உடலை மீட்பதற்குக் கூட பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பி வைக்காதது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. எனவே, மத்திய அரசினுடைய அனைத்து மேலாண்மை அமைப்புகளையும் அனுப்பி வைத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், மத்திய அரசு சார்பாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 இலட்சம் வழங்க வேண்டுமெனவும் புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
9) தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய வகையில் அவர்களுடைய வாழ்விடங்களை உடனடியாக நவீனப்படுத்தவும், அவர்களுக்கான உரிமையை மீட்டெடுக்கவும் புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டுமென புதிய தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
10) தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அணைக்கரைமுத்து, அப்பகுதி வனக்காவலர்களால் நள்ளிரவில் பிடித்துச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டு பிணமாகக் கொண்டுவரப்பட்டார். இன்றுடன் 18 தினங்களாகியும் வனக்காவலர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து வரும் 13-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் காலை 11 மணி முதல் 1 மணிக்குள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
11) ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் கிளைகளை ஒருங்கிணைக்கக் கூடிய பணிகளை நிறைவு செய்ய வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
12) தேவேந்திரகுல வேளாளர் அரசாணையும், பட்டியல் வெளியேற்றமுமே தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பிரதான கோரிக்கைகள் என்பதை புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதைத் தெரிந்தும், தெரியாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துரைக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு தேவேந்திரகுல வேளாளர் இல்லங்களுக்கும் துண்டு பிரசுரம் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் விரைந்து கொண்டு செல்ல வேண்டுமெனவும், பட்டியல் வெளியேற்றம் இல்லாத பெயர் மாற்றம் எவ்வித பயனையும் தராது என்ற உண்மையை எடுத்துரைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. ”பாறைக்குள்ளே ஒழிந்திருக்கும் சில தேரைகளை போல” நமது சமுதாயத்தின் பெயரைச் சொல்லி, பட்டியல் வெளியேற்ற கோரிக்கையிலிருந்து திசை திருப்ப கருங்காலி-சண்டியர் கூட்டங்களை கைப்பாவைகளாக பயன்படுத்துகிறார்கள் என்பதை நமது மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மனித குலம் வேளாண்மையைத் துவக்கிய காலத்திலிருந்து வேளாண்மையை அடையாளப்படுத்திய தேவேந்திரகுல வேளாளர் மக்களின் நிலங்களைப் பறித்துக் கொண்டு அவர்களை வறியவர்களாக்கி, நமது மக்கள் மீது அவர்களது மனதிற்கு வந்தபடியெல்லாம் முத்திரைகளை குத்தி, நம் இனத்தை கடைநிலைக்குத் தள்ளினார்கள். எனவே, நம்மினம் வாழ வேண்டுமென்றால் ஆதிதிராவிடர், அரிஜன், தலித், பட்டியலினம் என்ற முத்திரைகளிலிருந்து மீள வேண்டும். எனவே, ஆறு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒற்றைப் பெயரில் அடையாளப்படுத்துவதும், இப்போது இடம் பெற்றிருக்கக்கூடிய பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி தேவேந்திரகுல வேளாளர்களுக்கான சிறப்பு அந்தஸ்தை பெறுவதும் தான் நமது தலையாய கடமையாகும். எனவே, இதை தெளிவுபடுத்த வேண்டியவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. சுவையில்லாத தேன், மணமில்லாத மலர், இதமில்லாத தென்றல், குளிர்ச்சியற்ற அருவி போன்றவை எப்படி பயனற்றதோ? அதுபோல பட்டியல் வெளியேற்றம் இல்லாத பெயர் மாற்றம் எவ்வித பலனையும் தராது. சாதி ஒழிய வேண்டுமென வாய்கிழிய பேசுகிறார்கள்; சாதி ஒழியத்தான், எங்களை பட்டியலில் இருந்து வெளியேற்றுங்கள் என்று நாம் சொன்னால் சலுகைகள் போய்விடும் என்று அவர்கள் கதறுகிறார்கள். மேலும், சமூகநீதி பற்றி பேசுகிறார்கள்; தேவேந்திரகுல வேளாளர்கள் அடையாள மீட்பு, பட்டியல் வெளியேற்ற சமூக நீதி குறித்து பேசினால் ஓடி ஒளிகிறார்கள். நாம் தெளிபடுத்துவோம், பட்டியல் வெளியேற்றம் இல்லாத பெயர் மாற்றமும், பெயர் மாற்றம் இல்லாத பட்டியல் வெளியேற்றமும் எவ்வித சமூக மாற்றத்தையும் கொண்டுவராது. எனவே தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றதுடன் பட்டியல் வெளியேற்றம் என்பதை பாரெங்கும் எடுத்துரைப்போம்; மத்திய, மாநில அரசுகளுக்கு இடித்துரைப்போம்.
உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















