ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை சிட்னி நகரில் வரவேற்று பேசிய அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ், மோடியை த பாஸ் என்று அழைத்தார். அவர் அளவு புகழ்பெற்ற தலைவரை இந்த இடத்தில் பார்த்ததில்லை என்றும் புகழாரம் சூட்டினார்.
சிட்னி ஆயிரக்கணக்கான புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் உரையாட பிரதமர் மோடி சென்றார். அவருக்கு இந்திய இசைக்கருவிகளான செண்டமேளம், தவில் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை வரவேற்று கூட்ட அரங்க மேடைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் அழைத்துச் சென்றார். கூட்டத்தினர் இரு நாட்டு தலைவர்களை நோக்கி ஆரவாரம் செய்தனர். இருவரும் கையசைத்த படி மேடை ஏறினார். பின்னர் மைக் பிடித்த ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் மோடியை புகழ்ந்து தள்ளினார். அந்த பேச்சு சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
பிரதமர் அல்பனீஸ் பேசியதாவது: இந்த மேடையில் நான் கடைசியாக பார்த்தது பிரபல அமெரிக்க ராக் இசைப் பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை. அவருக்கு கிடைத்த வரவேற்பை விட பிரதமர் மோடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடி தான் பாஸ். ஒரு வருடத்திற்கு முன்பு நான் பிரதமராக பதவியேற்றேன். அதில் இருந்து இது எங்களின் ஆறாவது சந்திப்பாகும். இது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு எவ்வளவு முக்கியமானது என்பதை காட்டுகிறது.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளரும். ஏற்கனவே உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. மேலும் இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கியமான அண்டை நாடு இந்தியா. எனவே இரு தரப்பு உறவை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை உள்ளது. புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பால் ஆஸ்திரேலியா சிறந்த இடத்தில் உள்ளது. நமது அன்பிற்குரிய விளையாட்டு போட்டியாளராக இந்தியா உள்ளது. உலகின் கிரிக்கெட் மைதானங்களில் நாம் நிச்சயமாக மீண்டும் சாம்பியன்ஷிப்பில் போட்டியிடுவோம். என்று அவர் குறிப்பிட்டார்.