இன்ற மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் தங்கள் வாழ்த்துக்களையும், அவரது நினைவுகளையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவை தனது தொலைநோக்கு பார்வையால் வடிவமைத்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எனது அஞ்சலி என தெரிவித்து, ஒரு நீண்ட கட்டுரை ஒன்றை பிரதமர் மோடி தனது வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், இன்று டிசம்பர் 25 அனைவருக்கும் சிறப்பான நாள். இன்று அடல் பிகாரி வாஜ்பாயன் 100வது ஜெயந்தி விழாவை அனைவரும் கொண்டாடுகிறோம். 1998-ல் பிரதமராக வாஜ்பாய் பதவியேற்ற சமயத்தில் 9 ஆண்டுகளில் 4 மக்களவைத் தேர்தல்களை கண்டோம். மக்கள் மத்தியில் நிலையான ஆட்சியை கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தபோது, வாஜ்பாய் சிறந்த ஆட்சியை வழங்கினார்.
தற்போது நம்மை சுற்றியுள்ள பல்வேறு துறைகளில் வாஜ்பாயின் தலைமையின் கீழான நீண்ட கால தாக்கத்தை பார்க்கலாம். அவரது சகாப்தத்தில், இந்திய தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. வாஜ்பாயின் அரசாங்கம் தொழில்நுட்பத்தை சாதாரண குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டது. அதேபோல உலகத்தரம் வாய்ந்த இந்திய உட்கட்டமைப்பு திட்டத்தை உருவாக்கும் நோக்கில் டெல்லி மெட்ரோ அமைப்பதற்கான விரிவான பணிகளை செய்தது வாஜ்பாயின் அரசாங்கம்.
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன கல்வியை கொண்டு செல்ல வாஜ்பாய் வலியுறுத்தி திட்டங்களை திட்டினார். அவரது அரசாங்கம் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டது. வாஜ்பாய் பதவியேற்ற காலத்தில் தான் பொக்ரான் அணுகுண்டு சோதனை இந்தியாவில் நடைபெற்றது. இந்த சோதனை இந்திய அறிவியல் சமூகத்தின் திறமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டுகின்றன. இந்த அணுகுண்டு சோதனையை அடுத்து உலகளாவிய பொருளாதார தடையை எதிர்கொண்டது.
ஐக்கிய நாடு சபையில் ஹிந்தியில் பேசிய முதல் இந்திய தலைவர் வாஜ்பாய். இது இந்தியாவின் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தியது. உலக அரங்கில் ஒரு அழிக்க முடியாத முத்திரையை விட்டுச் சென்றது. அதேபோல் அவர் இலக்கியத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர். சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் கூட. அவரது வார்த்தைகள் கவிதைகள் பெரும்பாலும் தேசத்தின் மீது நம்பிக்கையை தருகின்றன. இது இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது.
என்னைப்போல, பாஜக தொண்டனுக்கு வாஜ்பாய் போன்ற ஒருவரை பற்றி தெரிந்து கொள்ளவும், அவருடன் பழகவும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். பாஜகவுக்கு அவர் அளித்த பங்களிப்பு அதன் வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது. அடுத்ததாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் கட்சியை அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்த்தனர். சவால்கள் தோல்விகள் வெற்றிகள் மூலம் பாஜகவை வழி நடத்தினர்.
வாஜ்பாயின் 100வது பிறந்தநாளில், அவரது லட்சியங்களை உணரவும், இந்தியாவுக்கான அவரது பார்வையை நிறைவேற்றவும் நம்மை அர்ப்பணிப்போம். நல்லாட்சி ஒற்றுமை முன்னேற்றம் என அவரது கொள்கைகளை உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம் என அந்த கட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு உள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















