மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளனர் என மிதுன் சக்ரவர்த்தி பேசியிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகரும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான மிதுன் சக்ரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
நீங்கள் பிரேக்கிங் நியூஸ் கேட்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 38 பேர் எங்களுடன் (பா.ஜ.க.) நல்ல உறவை கொண்டுள்ளனர். அவர்களில் 21 பேர் நேரடி தொடர்பில் உள்ளனர் என தெரிவித்தார்.
மிதுன் சக்கரவர்த்தி கூறியது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கூறுகையில், சில நாட்களுக்கு முன் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் உடல் ரீதியாக அல்ல, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நினைக்கிறேன். அவருக்கு அரசியல் தெரியாததுதான் பிரச்சினை என தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க.வுக்கு மக்கள் பணி ஏதுமில்லை. 3 முதல் 4 ஏஜென்சிகள் மூலம் மாநில அரசாங்கங்களை கைப்பற்றுவது அவர்களின் வேலை. அவர்கள் மகாராஷ்டிரா, ஜார்க்கண்டை கைப்பற்றினார்கள். ஆனால் மேற்கு வங்கம் அவற்றை தோற்கடித்தது. வங்கத்தை உடைப்பது எளிதானது அல்ல, ஏனெனில் நீங்கள் (பா.ஜ.க.) முதலில் ராயல் பெங்கால் புலியுடன் சண்டையிட வேண்டும் என தெரிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















