மலபள்ளி அருகே உள்ள சுங்காபரா கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா. இவரது தந்தை துணை ராணுவப் படையில் பணியாற்றி வருகிறார்.பளியக்கராவில் உள்ள சைரோ மலங்கரா கத்தோலிக்க தேவாலயத்தின் கீழ் கான்கிரிகிரேஷன் ஆஃப் பிரேசிலியன்ஸ் சிஸ்டர்ஸ் என்ற கன்னியாஸ்திரி சபை செயல்பட்டு வருகிறது.
இந்த சபையில் திவ்யாவும் மற்றொரு பெண்ணும் கன்னியாஸ்திரி ஆவதற்கு பயிற்சி பெற்று வந்தனர். இந்த சபையில் மேலும் 9 கன்னியாஸ்திரிகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை வகுப்பில் இருந்த திவ்யா பதினொன்றரை மணியளவில் வெளியே சென்றார். சுமார் 15 நிமிடங்களுக்குப் பின் கிணற்றில் கனமான பொருள் விழுந்த சத்தம் கேட்டு அனைவரும் அந்த இடத்திற்கு வந்து பார்த்தனர்.
அப்போது கிணற்றில் திவ்யா உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு கையிறு போட்டு அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் திவ்யா நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு படைவீரர்கள் வந்து திவ்யாவின் உடலை வெளியே எடுத்தனர்.
திவ்யாவின் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திவ்யாவுக்கு கன்னியாஸ்திரி சபையில் ஏதேனும் கொடுமைகள் நடந்ததா அல்லது அவர் வகுப்பில் இருக்கும்போது அவரை அவமானப்படுத்த கூடிய சம்பவங்கள் ஏதேனும் நடந்ததா எனகாவல்துறை விசாரித்து வருகிறார்கள்.
பிரேதபரிசோதனைக்கு பின் திவ்யாவின் உடல் அவரது தாயார் மற்றும் இரு சகோதரிகளிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கேரளா தேவாலயங்களில் கன்னியாஸ்திரிகள் உடல் ரீதியாக மன ரீதியாக பல கொடுமைகளுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. கடந்த ஆண்டு கேரள கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பாதிரியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினமலர்