மருத்துவ மற்றும் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதாக தி மு க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாஜக அரசில் தான் இந்த ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற மாயையை உருவாக்க எதிர்க்கட்சிகள் முனைவது சமூக நீதி விவகாரத்தில் அவர்களின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. 2007ம் ஆண்டு முதற்கொண்டே இதே நிலை தான் தொடர்கிறது என்பதை மறைப்பது முறையற்ற செயல்.
உண்மை நிலையினை மக்களிடம் எடுத்து கூறாது, அரசியல் உள்நோக்கத்தோடு விடப்படும் அறிக்கைகளை உறுதியாக மறுக்கிறது பாஜக. 04/01/2007 அன்று தி மு க, பா ம க அங்கம் வகித்த காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என சட்டம் கொண்டு வந்த போது, அது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என குறிப்பிட்டு, மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளித்து உத்தரவு பிறப்பிக்காதது ஏன்? மேலும், 2014 வரை எந்த வழக்கும், தடையும் இல்லாத நிலையில், 6 ஆண்டுகள் தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு குறித்து வாய்மூடி மௌனமாக இருந்தது ஏன்? இது குறித்து கவலையே கொள்ளாத தி மு க, 2015ல் இது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில், தங்களை இணைத்து கொள்ளாது, இந்த வருட மருத்துவ படிப்புக்கான அகில இந்திய கலந்தாய்வு கூட்டம் கடந்த ஏப்ரல் மாதமே முடிந்து விட்ட நிலையில், திடீரென்று தற்போது தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்ட அரசியல் காரணத்தினால் தான் என்பது கண்கூடு.
பாஜக அரசை பொறுத்த வரை, 2015ல் தொடுக்கப்பட்ட சலோனி குமாரி வழக்கில், ஜனவரி 2016 லியே மத்திய பாஜக அரசு தன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து விட்டது. இந்த ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதை மாற்றும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளதால் மேற்கண்ட வழக்கில் ‘ இதர பிரிப்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு தர தயாராக உள்ளது மத்திய அரசு, இதற்கான உத்தரவை வழங்குங்கள்’ என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தற்போது, உயர்நீதிமன்றத்திலும் பாஜக மத்திய அரசு இதே நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. அதோடு இந்த வழக்கில் தி மு கவின் வழக்கறிஞர், அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு (EWS) 10 % இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொடுத்துள்ளதாக தவறான தகவலை பதிவு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கே மட்டுமே அது பொருந்தும் என அறிந்தும் மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற உண்மைக்கு மாறான தகவலை அரசியல் உள்நோக்கத்தோடு குறிப்பிட்டுள்ளது முறையற்றது.
1986 முதல் அமலில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்த 34 வருடங்களாக இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காக குரல் கொடுக்காத அரசியல் கட்சிகள், பாஜக அரசு அதை நிறைவேற்ற தயார் என்று நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தங்களின் அரசியலுக்கு அதை சாதகமாக பயன்படுத்தி கொள்ள முனைவதும், பாஜகவை குறை சொல்வதும், காரணமாக்குவதும் அந்த கட்சிகளின் அரசியல் உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. சமூக நீதிக்கும், சட்டத்திற்கும் பாஜக என்றும் தலைவணங்கும் என்பதோடு, அரசியல் கலப்பில்லாத, உள்நோக்கமில்லாத சமூக நீதிக்கு, பாஜக என்றும் துணை நிற்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்.
பாரதிய ஜனதா கட்சி,
தமிழ்நாடு.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















