அயோத்தியில், பாபர் மசூதி இருந்த போது, 1976 – 77ல், இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர். இந்தக் குழுவில், கேரளாவைச் சேர்ந்த கே.கே.முகமது இடம் பெற்றிருந்தார்.அந்த சமயத்தில், அயோத்தில் நிலத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தியதில், இவரும் ஒருவர். இவர் நீண்ட காலமாக, ஹிந்துக்களுக்கு உரிமை உள்ள இடங்களை ஒப்படைக்கும்படி முஸ்லிம்களிடம் வலியுறுத்தி வருகிறார்.
கடந்த 2012ல் கே.கே.முகமது ஓய்வு பெற்றார். 500 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின், தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாடே திருவிழா போல் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் கே.கே. முகமது ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.
அப்போது நெறியாளர், “ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்ற இந்த நேரத்தில், நாட்டில் உள்ள இந்து – முஸ்லிம் மக்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய செய்தி என்ன?” என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கே.கே. முகமது, “முஸ்லிம் மக்களுக்கு ஒரு அறிவுரையை நான் கூற விரும்புகிறேன்.
அயோத்தியா , காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களும் இந்துக்களுக்கு மிக முக்கியமான புனித இடங்கள்.அதை இந்துக்கள் கேட்பது நியாயமான கோரிக்கை தான்.முஸ்லிம்களுக்கு எப்படி மதினா, மெக்கா இருக்கிறதோ, அதே போல இந்துக்களுக்கு இந்த இடங்கள் இருக்கின்றன. முதலில் இந்த விஷயத்தை முஸ்லிம்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே, காசி, மதுரா ஆகிய இடங்களில் இந்துக்கள் தங்கள் கோயில்களை கட்ட ஏதுவாக, முஸ்லிம்களே தாமாக முன்வந்து அந்த இடங்களை ஒப்படைக்க வேண்டும் . மத பிரச்சினைகளை தீர்த்து பலமான இந்தியாவாக உருவாக இதுதான் சிறந்த வழி” என கே.கே. முகமது கூறினார் .