சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நெல்லை டவுனில் உள்ள அவரது மணி மண்டபத்தில் பா.ஜ.க சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பா.ஜ.க சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் பேசியதாவது.
இது சரித்திர நாள். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சியின் 150-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு சாதாரண மனிதர் கிடையாது.
பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல்விட்ட ஒரு சாதனை நாயகன் ஆவார். இன்று அவர் புகழ் நாடு முழுவதும் பரவி உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுக்காமல், தமிழக அரசு முரட்டு பிடிவாதமாக இருக்க காரணம் என்ன? என்று தெரியவில்லை.
பாரதிய ஜனதா தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10 முதல் 12 ம் தேதி வரையில் 3 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன்பு பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள்.
இது, தனி மனித உரிமை. இதனைத்தடுக்க யாருக்கும் அனுமதியில்லை. மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி போல், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கட்டுபாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.
ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் , அவரின் அமைச்சர் சகாக்கள் மற்றும் அதிகாரிகள் இஷ்டத்துக்கு முடிவு செய்யக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.