“ஆட்சி செய்வதற்கு திறமை இல்லாதவர், திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதற்குதான் தகுதியானவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா கடுமையாக விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:-
கடந்த நான்கு நாட்கள் பெய்த மழையில் சென்னை தி.நகர் மூழ்கியதற்கு வடிகால் இல்லாதது காரணமல்ல என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மாம்பலம் கால்வாயில் 1.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு குப்பையை குவித்துள்ளனராம். இதன் காரணமாக, 5.8 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் முழுமையும் அடைந்துவிட்டது.
இந்த கால்வாயானது வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஒய்.எம்.சி.ஏ வரை அடையார் ஆற்றிற்கு நீரை கொண்டு செல்கிறது. தி.நகரை சுற்றியுள்ள கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, அசோக் நகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதற்கு காரணமும் கால்வாயில் குப்பைகளை
கண்மூடித்தனமாக கொட்டியதே.
கனமழை பெய்யக்கூடும் என அக்டோபர் 30-ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களோ நவம்பர் 1-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தை பார்த்ததாக புகழ்ந்து ட்வீட் போடுகிறார். “ஒரு மாநில முதல்வருக்கு
மழை முன்னேற்பாடுகளை கவனிப்பது முக்கியமா? அல்லது புது திரைப்படம் பார்ப்பது முக்கியமா?”
என்ற கேள்வி மக்களிடம் எழாமல் இல்லை.
ஆட்சி செய்வதற்கு திறமை இல்லாமல், எண்ணமும் இல்லாமல் திரைப்படங்கள் பார்ப்பது, திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது, திரைப்பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு பத்திரங்கள் பத்திரங்கள் வாசிப்பது, மழை நேரத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளை நாள் முழுக்க அருகில் வைத்துக்கொண்டு ஷீட்டிங் செய்வது ஆகியவற்றை துறந்து மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்யுங்கள் முதல்வர் அவர்களே. உங்கள் விளம்பர மோகத்துக்கு தமிழர்களை பலிகடா ஆக்க வேண்டாம் என கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் எஸ்.ஜி.சூரியா குறிப்பிட்டு உள்ளார்.