தெலங்கானாவில் இருதரப்பினர் மோதலில், நடுரோட்டில் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தொடர்பாக எம்ஐஎம் கட்சி மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் எம்ஐஎம் கட்சி செயல்படுகிறது. இதன் ஆதிலாபாத் மாவட்ட தலைவரும், முன்னாள் நகராட்சி துணை தலைவருமான பாரூக் அகமதும். அவரது உறவினர்களும் பல ஆண்டுகளாக இக்கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தனர்.
ஆனால், உறவினர்களும் குடும்பத்தினரும் சில ஆண்டுகளுக்கு முன், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தனர். இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாரூக்கின் உறவினர்கள், அங்குள்ள சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, நண்பர்களுடன் அங்கு சென்ற பாரூக் அகமது, உறவினரின் மகன்களிடம் தகராறு செய்தார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த பாரூக் அகமது அவர்களை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்கினார். இதில், படுகாயமடைந்த ஜமீர், மோத்தேசன், மன்னன் ஆகிய 3 பேர் ஆதிலாபாத் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, பாரூக் அகமது கைது செய்யப்பட்டார். பாரூக்கிடம் இருந்து துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து, அவருக்கு லைசன்ஸ் ரத்து செய்தனர்.
ஓவைசி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் இந்த கட்சியை நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என மாற்றுக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.