பாகிஸ்தான் சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் செய்தது. இதில் எம்ஜிஎஸ் பீரங்கி வாகனங்கள், எம்109 மற்றும் பிஎம்-21 பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 155 எம்எம் மற்றும் 122 எம்.எம் ரக குண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால், பாகிஸ்தானில் பீரங்கிகள் மற்றும் குண்டுகள் கையிருப்பு வெகுவாக குறைந்தது. இந்தத் தகவலை கடந்த 2-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்
இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிர போர் ஏற்பட்டால், பாகிஸ்தானிடம் இருக்கும் பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் 4 நாட்களில் தீர்ந்துவிடும் நிலை உள்ளது. வெடிமருந்து தொழிற்சாலைகளில் உள்ள உற்பத்தி இயந்திரங்கள் மிகவும் பழமையானவை. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்ததால் வெடிமருந்து தொழிற்சாலைகளை நவீனப்படுத்தவில்லை. அதனால் இங்கு உடனடியாக வெடிமருந்து பொருட்களை அதிகளவில் தயாரிப்பது சிரமம்.பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி படையைத்தான் அதிகளவில் சார்ந்துள்ளது. அப்படைக்குத் தேவையான தளவாடங்கள் குறைவாக இருப்பது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாக். தூதர் மிரட்டல்: இதனிடையே, ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி அளித்த பேட்டி ஒன்றில், “பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது போர் தொடுப்பதற்கு சமமானது. மேலும், பாகிஸ்தானின் சில பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த திட்டிமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.
மேலும் ‛இந்தியா உடனான மோதலுக்காக வாய்ப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போர் ஏற்படாமல் இருக்க நம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் இந்தியா உடனான மோதல் என்பது குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலைமையை தவிர்க்க பல நாடுகள் முயற்சி மேற்கெண்டு வருகின்றன” என்று கூறினார். இப்படி இந்தியாவுடனான மோதலுக்கு பயந்து, சொந்த ராணுவத்தினர் மீது நம்பிக்கை இல்லாமல் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார் என பாக் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் பாகிஸ்தானில் நிலவும் ஆயுத பற்றாக்குறை தான் காரணமாக உள்ளது. அதாவது பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. நாட்டில் கடன் என்பது அதிகரித்துள்ளது. பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. அதேபோல் அந்நிய செலாவணி கையிருப்பும் கரைந்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பாகிஸ்தானில் ஆயுதப்பற்றாக்குறை என்பது அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி விமானங்கள் உள்பட போரை சமாளிக்க தேவையான ஆயுதங்கள் நவீனமயமாக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா – பாக். பதற்றம் அதிகரிப்பு: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். சிந்து நதி நீர் பங்கீடு ரத்து செய்யப்பட்டது. வாகா எல்லையை மூடவும், பாகிஸ்தானியர் வெளியேறவும் உத்தரவிடப்பட்டது. இந்திய தரப்பில் தீவிரப் போர்ப் பயற்சி நடைபெற்று வருகிறது. காஷ்மீர் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், பாதுகாப்பு படை தலைமை தளபதி ஆகியோருடன் பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இதில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்தார்.
இதனிடையே, சிந்து போர் பயிற்சி என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் 450 கி.மீ சென்று தாக்கும் அப்தலி என்ற ஏவுகணையை சோதனை செய்து பதற்றத்தை அதிகரித்தது. இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, பிரதமர் மோடியை நேற்று முன்தினம் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை பிரதமர் மோடி நேற்று தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் கடற்படை தளபதி, விமானப்படை தளபதி ஆகியோரை பிரதமர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















