திருப்பூர் மாவட்ட கனிம வள உதவி இயக்குனர் வள்ளலை, பணியிலிருந்து மே 17ம் தேதி விடுவித்து, முந்தைய கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குறைகேட்பு, அமைச்சர், கலெக்டர் நடத்தும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்காதது; கனிம வள அலுவலகத்தில் சம்பந்தமில்லாத பெண் ஒருவர் பணிபுரிவது குறித்த புகாருக்கு பதிலளிக்காதது உள்ளிட்ட காரணங்கள், உத்தரவிலேயே சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
வள்ளல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதை, இனிப்பு வழங்கி விவசாய அமைப்பினர் கொண்டாடினர்.இந்நிலையில், வள்ளல் தொடர்ந்து பணிபுரிவார் என மே 26ம் தேதி, கனிம வளத் துறை கமிஷனர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், அமைச்சர் துரைமுருகன் மற்றும் கனிம வளத்துறை கமிஷனருக்கு ‘பாராட்டு விழா’ நடத்தினர்.சங்க தலைவர் ஈசன் உட்பட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ‘ஊழல் அதிகாரி வள்ளலை பாதுகாத்துவரும் அமைச்சர் துரைமுருகன், கமிஷனர் ஜெயகாந்தனுக்கு வாழ்த்துகள்’ என, கோஷமிட்டனர்.
போலீசார் பேச்சு நடத்தியும், தரையில் அமர்ந்து விவசாயிகள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதையடுத்து, அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார், காமாட்சியம்மன் கோவில் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















