கேரள மாநிலத்தில் , முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. கேரளாவை உலுக்கி வரும் பிரச்சனை என்று பார்த்தால் சொப்னாவும் தங்கக் கடத்தல் விவகாரமும் தான்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் கிளை அலுவலகத்தில் பணியாற்றும் சிலரின் உதவியுடன் தங்கக் கடத்தல் நடந்து வருவது சுங்கத்துறைக்கு தெரியவந்தது.
சுதாரித்து கொண்ட சுங்கத்துறை விமான நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டது. அமீரகத்தில் இருந்து தூதரக அலுவலகத்திற்கு வந்த தூதரக சரக்கு (டிப்ளமேட்டிக் லக்கேஜ்) சோதனையை மேற்கொண்டது சுங்கத்துறை. அந்த சோதனையில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள் பிடிபட்டது இவை சட்ட விரோதமாக கடத்தப்பட்டது என்பதும் தெரியவந்தது.
மேலும் இதில் வரும் பணம் தீவிரவாதிகளின் செயல்பாட்டுக்கு உதவுவதாக விசாரணையில் அம்பலமானது, இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், என்பவர் தான் இவர் கைது செய்யப்பட்டு திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்
இந்த வழக்கில் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கடந்த 2019 நவம்பரில் கேரள அரசின் ‘ஸ்பேஸ் பார்க்’ திட்டத்தில் சேர்ந்துள்ளார். தனது நியமனம் பற்றி கேரள முதல்வருக்குத் தெரியும் என ஸ்வப்னா கூறியுள்ளார்.
முதல்வரின் முதன்மைச் செயலர் சிவசங்கரை அலுவல் ரீதியாக ஸ்வப்னா 8 முறையும், அலுவல்ரீதியாக அல்லாமல் பல முறையும் சந்தித்துள்ளார். முதல்வர் உடனிருக்கும் போதும் சிவசங்கரை ஸ்வப்னா சந்தித்துள்ளார். ‘ஸ்பேஸ் பார்க்’ நியமனத்தின் போது, முதல்வரிடம் பேசி நியமனத்தை உறுதி செய்வதாக ஸ்வப்னாவிடம் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். ஸ்பேஸ் பார்க்கில் 2 அதிகாரிகளை சந்தித்து தனது பொறுப்புகளை தெரிந்து கொள்ளும்படி ஸ்வப்னாவிடம் சிவசங்கர் கூறியுள்ளார். இதையடுத்து பணியில் சேரும்படி ஸ்வப்னாவுக்கு அழைப்பு வந்துள்ளது.
நிரந்தர வைப்புத் தொகையாக ஸ்வப்னா ரூ.35 லட்சம் டெபாசிட் செய்ய உதவும்படி பட்டய கணக்காளர் வேணுகோபாலிடம் சிவசங்கர் கேட்டுக்கொண்டார். ஆனால் அத்தொகையை பாதுகாக்க, ஸ்வப்னாவுடன் சேர்ந்து கூட்டு வங்கி லாக்கரை வேணுகோபால் தொடங்கியுள்ளார். நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சிவசங்கர் – வேணுகோபால் இடையிலான வாட்ஸ்ஆப் உரையாடல் ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக சிவசங்கர் பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கில் சிவசங்கரின் பங்கு குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.