இதுதொடர்பாக ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த இரண்டு வாரங்களாக…. வாஷிங்டன் போஸ்டில் ஆரம்பித்து, இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் சிலாகித்த ஒரு மாநிலம் கேரளா.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் கேரளாவை அடித்துக்கொள்ள ஆளில்லை என்று புளங்காகிதம் அடைந்தார்கள்…
தமிழகத்து தோழர்களோ வானுக்கும் பூமிக்கும் குதித்து, கேரளாவைப் பார், தோழர் பினராயியைப் பார் என்று ஆனந்தக் கூச்சலிட்டு மகிழ்ந்தார்கள்.
தோழர் பினராயி விஜயனை பாராட்டவில்லை என்றால், கண்டிப்பாக நீங்கள் கொரோனா ஆதரவாளர் என்கிற அளவிற்கு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
ஆனால் எப்போதும் அகிம்சாவாதியான தோழர் அச்சுதானந்தனால் நிராகரிக்கப்பட்ட, தோழர் பினராயியைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.
1998 ஆம் ஆண்டு இதே தோழர் பினராயி கேரளாவின் மின்சாரத்துறை அமைச்சர். அப்போது செங்குளம் பண்ணையாறு உள்ளிட்ட மூன்று இடங்களில் இருந்த, நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்குவதற்காக,என் எஸ் சி லாவ்லின் என்கிற கனடா நாட்டைச் சேர்ந்த கம்பெனிக்கு, டெண்டர் விட்டதில் அரசுக்கு 374.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, இதே தோழர் பினராயியின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தபோது,தன்னுடைய குரலை காத்திரமாக பினராயிக்கு எதிராக எழுப்பியவர் அதே மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர் அச்சுதானந்தன்.
இப்போது திடீரென நவீன புத்தராக அவதாரமெடுத்த பினராயிக்கெதிராக, வெடித்துக் கிளம்பி இருக்கிறது ஸ்பிரிங்லர் ஊழல்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக,,, கிழித்து கேப்பையை நட்டதாகக் கதைவிட்ட இந்த மார்க்சிஸ்டுகள், நோய் தொற்றுக்காக சோதிக்கப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மலையாளிகளின் ரகசிய தரவுகளை சேகரிக்கும் பொறுப்பை, அமெரிக்காவை பின்னணியாகக் கொண்ட, தடுப்பு பட்டியலிலுள்ள, ஸ்பிரிங்லர் என்கிற தனியார் நிறுவனத்திற்கு விட்டு, தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டிருக்கிறது.
இந்த முடிவை தன்னுடைய அமைச்சரவையை கூட்டி ஆலோசிக்காத தோழர் பினராயி விஜயன், முடிவை எடுக்கும் பொறுப்பை கேரள மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் எம் சிவசங்கரனிடம் ஒப்படைத்தது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
வணிக விதிகளின்படி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தரவு சேகரிக்கும் பணியை, தனியார் நிறுவனத்திடம் அதுவும் அமெரிக்க நீதிமன்ற வரம்புக்கு கட்டுப்பட்ட ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு, தகவல் தொழில்நுட்ப செயலாளருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்கிறது விதி.
ஆனால் அதையும் மீறி சிவசங்கரன் இந்த முடிவை எடுக்கத் தூண்டியது யார்…?
இதே பணிக்காக இந்தியாவில் இருக்கும் தனியார் நிறுவனங்களான புகழ்பெற்ற சி-டிஐடி,என் ஐ சி போன்ற கம்பெனிகளை புறக்கணித்துவிட்டு, கொரோனா நோயாளிகளின் தரவை சேமித்து பகுப்பாய்வு செய்வதற்கு,பன்னாட்டு கம்பெனிக்கு அனுமதி கொடுக்க வேண்டிய அளவிற்கு பினராயிக்கு நெருக்கடி கொடுத்தது யார்…?
இந்த சமயத்தில்தான் இடுக்கி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பியும், திருக்காகரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி. தாமஸ் எழுப்பிய கேள்வி கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தோழர் பினராயி விஜயன் அவர்களின் மகளான திருமதி வீணா, பெங்களூரை மையமாகக் கொண்டு நடத்தும், 300 கோடி மதிப்பிலான எக்ஸலாக் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் மென்பொருள் நிறுவனத்திற்கும், அமெரிக்காவின் ஸ்பிங்லர் நிறுவனத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பதாகும்.
தோழர்
பினராயி விஜயனுடைய மகள் திருமதி வீணாவே, கேரள அரசுக்கும், ஸ்பிங்லர் நிறுவனத்திற்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட காரணமானவர் என்கிற பி.டி. தாமஸின் குற்றச்சாட்டு, கேரளாவை உலுக்கி எடுத்து வருகிறது.
தன்னுடைய சொந்த மாநிலத்தில் தொழில் தொடங்கி, அங்குள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தராமல், எதற்காக திருமதி வீணா பெங்களூரூ போய் தொழில் தொடங்கினார் என்ற கேள்விக்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில்… இந்தப் புதிய பிரளயம் வெடித்துக் கிளம்பி இருக்கிறது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிற கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர், முல்லப்பள்ளி ராமச்சந்திரனுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்ட வேண்டிய ஒன்று அல்ல.
அதுபோல பினராயி விஜயன் பதவி விலகி, சிபிஐ விசாரணையை ஏற்க வேண்டும் என்கிற கேரள எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலாவின் கூற்றும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல.
கூடுதலாக பி.டி. தாமஸின் குற்றச்சாட்டு நிரூபணமாகும் விதமாக, ஸ்பிரிங்லர் விவகாரம் கேரளாவில் வெடித்தபின், திருமதி வீணாவின் மென்பொருள் நிறுவனத்தின்
வலைத்தளம் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
மென்பொருள் வெளியீடு அது குறித்த ஆலோசனை மற்றும் வினியோகம் என ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையே தன்னுடைய கைப்பிடிக்குள் வைத்திருக்கும் திருமதி வீணாவினுடைய மென்பொருள் நிறுவனம்,தன்னுடைய வலைத்தளத்தை இடைநிறுத்தம் செய்திருப்பது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகமே அதிர்ந்து கிடக்கும் ஒரு நோய்த்தொற்று குறித்த
முக்கியமான தகவல்களை,தடுப்பு பட்டியலில் உள்ள பன்னாட்டு கம்பெனியிடம் ஒப்படைப்பது என்பது… அடிப்படை உரிமைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கான எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்குவதாகும் என்பதை திருமதி வீணாவால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞராக அறியப்படும் திருமதி வீணாவின் கணவர் திரு.சுனீசன் இதை எப்படி அனுமதித்தார்…
ஆதார் கார்டு விநியோகம் தொடர்பான தரவுகள் சேகரிக்கும் போது,,,ஐயகோ தனிநபர் உரிமை, தனிநபர் அந்தரங்கம் பறிபோகப்போகிறது என்று கூச்சலிட்ட, மார்க்சிய பொலிட்பீரோ, பினராயி விஜயனின் இந்தப் பன்னாட்டுக் கம்பெனி தொடர்பை எப்படி ஏற்றுக் கொள்கிறது…?
அதாவது அடிப்படைத் தகவல்களை ஒரு அரசு கேட்டுப் பெற்றால் அது தனிநபர் சுதந்திரம் பறிப்பு…
இதே செயலை இன்னும் கூடுதலாக மருத்துவ தரவுகளுடன் , ஒரு பேரிடர் காலத்தில், பன்னாட்டு கம்பெனி ஒன்று செய்தால்,,, அதற்கு சிவப்பு கம்பளம்.
என்னே தோழர்களின் வியாக்கியானம்…
இதைவிடக் கொடுமை வரும் செப்டம்பர் மாதம் வரை,ஸ்பிரிங்லர் இலவசமாக தன்னுடைய சேவையை கேரளாவில் செய்யப்போகிறது என்பதுதான்.
கூடுதலாக
ஸ்பிரிங்லர் நிறுவனத்திற்கும், கேரள அரசுக்குமிடையே ஏதாவது ஒப்பந்த தகராறு ஏற்பட்டால்…
வழக்கை கேரளா எதிர்கொள்ள வேண்டியது அமெரிக்க நீதிமன்றத்தில் என்பதுதான் கொடூரம்…
இன்றைக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மலையாளிகளின் தனிப்பட்ட முக்கிய சுகாதார தகவல்களை சேகரித்திருக்கிறது ஸ்பிரிங்லர் நிறுவனம்.
நாளையே இவர்கள் பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு இந்த தரவுகளை, கை மாற்றுவதில் பெரிய சிக்கல் ஏதும் இருக்கப் போவதில்லை. இப்போது எங்கே போனது பொலிட்பீரோ.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இதே மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தரவு தனியார் உரிமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் முழங்கியவர்களும் இவர்கள்தான்.
என்ன செய்யப்போகிறார் தோழர் பினராயி…
எதற்கெடுத்தாலும் கேரளாவைப்பார் என்று மேற்கு நோக்கி உயிரை விடக் காத்திருக்கும் தமிழகத்து மார்க்சிஸ்ட்கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்…
தனிமனிதனின் அந்தரங்க உரிமைகளை…
சுகாதார தகவல்களை…
தடுப்பு பட்டியலில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு அளிப்பது என்பது எத்தனை கொடூரமான விடயம் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்…
தற்போது கிடைத்த தகவலின்படி… சோம்பேறிகளின் மடமாக அறியப்படும் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரான, தோழர் ராமச்சந்திரன் பிள்ளை,மலையாளிகளின் சுகாதார தகவல்களை ஸ்பிரிங்லர் நிறுவனத்திற்கு அளித்ததில் தவறேதும் இல்லை என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.
நல்லா வருவீங்க தோழர்களே…