இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி மனஉறுதியை உயர்த்தினார் பிரதமர் மோடி என பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் உலக கோப்பை தொடரின் பைனல் நடந்தது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. ஆஸ்திரேலியா 6 வது முறையாக சாம்பியன் ஆனது. பைனலை நேரில் பார்த்தார் பிரதமர் மோடி.
போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்சிற்கு உலக கோப்பை வழங்கினார். பின் இந்திய வீரர்களின் ‘டிரசிங் ரூம்’ சென்று ஆறுதல் கூறினார்.
இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த முகமது ஷமியை அருகில் அழைத்து ஆறுதல் கூறினார். ஜடேஜாவிடம் ஆறுதலாக பேசினார்.
இது தொடர்பாக, பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் கூறியிருப்பதாவது: கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மா நன்றாக விளையாடி அணியை சிறப்பாக வழி நடத்தினார். கடைசி நாளில் தான் அந்த தந்திரத்தை தவறவிட்டார். இல்லையெனில், அவர் உலகக் கோப்பையை வெல்ல முற்றிலும் தகுதியானவர். அவரால் ஏன் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரு தேசமாக நாடே இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலமாக நிற்கிறது. இது மிகவும் உணர்ச்சிகரமான நேரம். வீரர்களுடன் தான் இருப்பதாக உங்கள் பிரதமர் தெளிவான செய்தியை அளித்துள்ளார். தனது குழந்தைகளாக வீரர்களை உற்சாகப்படுத்தி மனஉறுதியை உயர்த்தினார். இது பிரதமர் மோடியின் சிறந்த செயல். மேலும் விளையாட்டு வீரர்கள் நன்றாக விளையாட ஊக்கம் அளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.