ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் செய்ய ஓகே சொல்லும் வகையில் புதின் பேசியுள்ளார்.பிரதமர் மோடி முயற்சி எடுத்து, உக்ரைனும் அதற்கு ஒத்துழைத்தால், பேச்சுவார்த்தையில் பங்கேற்க ரஷ்யாவும் தயங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022 பிப். மாதம் போர் தொடங்கிய நிலையில், அது ஆண்டுக் கணக்கில் நீடித்து வருகிறது. போரை நிறுத்த இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கின.
இருப்பினும், ரஷ்யா போர் நிறுத்தம் செய்ய தொடர்ந்து மறுத்தே வந்தது. இதற்கிடையே திடீரென ரஷ்ய அதிபர் புதின் தனது டோனை மாற்றி இருக்கிறார். மனமாற்றம்: ஆண்டுக் கணக்கில் போர் தொடரும் நிலையில், உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக புதின் கூறியுள்ளார். இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில், புதினின் இந்த மனமாற்றம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்குப் பொருளாதார மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார். அங்கே புதின் பேசுகையில், “ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால், ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2022இல் போடப்பட்ட முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் இருக்க வேண்டும்” என்றார்.
இத்தனை காலம் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று கூறி வந்த புதின், திடீரென உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி சமீபத்தில் தான் ரஷ்யாவுக்குச் சென்று புதினை சந்தித்திருந்தார். அதேபோல உக்ரைனுக்கு சென்று ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து இரு தலைவர்களையும் சந்தித்த நிலையில், புதினும் இந்தியா மத்தியஸ்தம் செய்து வைக்கலாம் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது
”போர் நிறுத்த பேச்சை தொடர உக்ரைன் ஆர்வமாக இருந்தால், அதில் எனக்கும் சம்மதமே,” என்றார்.
இது குறித்து ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மட்டுமின்றி அமெரிக்காவுடனும் சுலபமாக பேசக்கூடியவர் இந்திய பிரதமர் மோடி..இருதரப்பின் எண்ணங்களையும் நேரடியாக கேட்டறிந்து, அமைதிப் பேச்சை வழிநடத்தவும் மோடியால் முடியும். சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் செல்வாக்கை வெளிப்படுத்த இது சரியான சந்தர்ப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவுக்கும், பிரேசிலுக்கும் இரு தரப்புடனும் விவாதிக்க வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்பதால், புடின் குறிப்பிட்ட மூன்று நாடுகளில் இந்தியா மட்டுமே நிற்கிறது.