பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஒரு துளி நீருக்கு அதிக பயிர்’ என்னும் மத்திய அரசு திட்டத்தை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறை செயல்படுத்தி வருகிறது.
ரூ 5,000 கோடி மூலதன நிதியுடன் குறு நீர்ப்பாசன நிதியம் நபார்டின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னொரு ரூ 5,000 கோடி நிதியுடன் குறு நீர்ப்பாசன நிதியத்தின் மதிப்பு இரட்டிப்பாக்கப்படவுள்ளது.
இந்த நிதியத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஹரியானா, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ 3970.17 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இங்கு 2021 பிப்ரவரி 3 வரை 608.73 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 516.94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு இது வரை செய்யப்பட்டுள்ள நெல் கொள்முதல் 17.75 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு காரீப் சந்தை காலத்தில் 89.00 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 114928.64 கோடி பெற்றுள்ளனர்.
மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 51.92 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.
பல்வேறு சந்தைகள் மற்றும் வாங்குவோர்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகள் சென்றடைவதற்காக தொடங்கப்பட்ட இ-நாம் என்றழைக்கப்படும் தேசிய வேளாண் சந்தை “ஒரே நாடு, ஒரே சந்தை” என்னும் லட்சியத்தை அடைவதற்கு உதவி வருகிறது.
18 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 1000 சந்தைகள் இது வரை இ-நாமில் இணைக்கப்பட்டுள்ளன. 1.69 கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், 1.55 லட்சம் வர்த்தகர்களும் இதில் இணைந்துள்ளனர். வெளிப்படையான ஆன்லைன் ஏல முறையின் மூலம் ரூ 1.22 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் பொருட்கள் விற்கப்பட்டு, அதற்கான கட்டணங்கள் நேரடியாக விவசாயிகளை சென்றடைந்துள்ளது.
இ-நாம் முறையின் வெற்றியை தொடர்ந்து, 2021 பிப்ரவரி 1 அன்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தவாறு, இன்னும் 1000 மண்டிகள் இ-நாமில் இணைக்கப்படும்.
கொவிட்-19 காலகட்டத்தின் போது, விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான விற்பனை வசதியும் இ-நாம் தளம்/செயலியில் தொடங்கப்பட்டதன் மூலம், 1844 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் இதுவரை இணைந்துள்ளன.
இ-நாம் முறை வெறும் திட்டமாக மட்டுமேயில்லாமல், கடைகோடி விவசாயிக்கும் நன்மை பயக்கும் விதமாக உருவெடுத்துள்ளது. தங்களது வேளாண் பொருட்களை விவசாயிகள் விற்கும் முறையையே இது மாற்றியமைத்துள்ளது.