விழுப்புரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது.வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1208 நாட்கள் கடந்துவிட்ட பின்னரும் தமிழக அரசு அதனை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து விழுப்புரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அன்புமணி ராமதாஸ் மேடைப்பேச்சு:
அனைத்து சமுதாயங்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் 45 ஆண்டு காலமாக போராடி வருகிறார் ஆனால் அதனை ஆளும் கட்சியாக இருப்பவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.
1987ல் நடந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் 21 தியாகங்கள் உயிரிழந்தனர் அவர்களில் 15 பேர் இதே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்கள் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் அதற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற அடிப்படையிலே தான் அவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தார்கள்.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமானால் அதற்கு மத்திய அரசு அனுமதி தேவை கிடையாது மாநில அரசே தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி உள்ள இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம் தெரிவித்த பிறகும் தமிழக அரசு தாமதம் செய்வது ஏன்? சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஏற்கனவே தன்னிடம் இருக்கும் தரவுகளை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது ஆனால் தமிழக அரசு அதனை செய்ய மறுக்கிறது.
திமுகவிற்கும்,முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் எள்ளளவும் கிடையாது. திமுக என்றால் வன்னியர் விரோதி சமூக நீதிக்கு எதிரி என்று பொருள்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 45 ஆண்டு காலமாக போராடியும் கூட இந்த சமுதாயத்திற்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.
திமுகவில் 23 எம்எல்ஏக்களும் ஐந்து எம்பிக்களும் என மொத்தமாக 28 பேர் வன்னியர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஏதாவது வன்னியர் என்ற உணர்வு உள்ளதா? இதில் ஒரு சிலர் திறமையின் அடிப்படையில் எம்எல்ஏ எம்பி ஆகியுள்ளனர் ஆனால் மற்றவர்கள் வன்னியர் என்ற சாதிய அடிப்படையில்தான் அவர்களுக்கு சீட்டு கிடைத்தது வெற்றி பெற்றார்கள்..
இவர்கள் 28 பேரில் என்றாவது ஒரு நாள் முதலமைச்சரை சந்தித்து ஐயா எங்கள் சமுதாயத்தை சார்ந்தவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள். உரிய படிப்பும் வேலையும் இல்லாததால் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் இந்த சமுதாயம் முன்னேறும் என்று நமக்காக பேசியிருக்கிறார்களா?
தமிழக சட்டமன்றத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களில் திமுக அதிமுக காங்கிரஸ் பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வன்னியர் சட்டமன்ற உறுப்பினர்கள் 38 பேர் உள்ளனர் இவர்கள் வருகின்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைவரும் வெளியில் அமர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் நாங்கள் சட்டமன்றத்திற்கு உள்ளே செல்வோம் என்று போராட்டம் நடத்த தயாரா? சொல்வார்களா? சொல்ல
வைக்க வேண்டும். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அதனை செய்கிறார்கள் ஆனால் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு கோரிக்கை வைக்க மறுக்கிறார்கள்.
இந்த இளைஞர்கள் அழுத்தம் கொடுத்தால் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து பேசுவார்கள்..
கடந்த அதிமுக ஆட்சியில் இபிஎஸ் 10.5% இட ஒதுக்கீடு கொடுத்தார் ஆனால் அதற்கு நாங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினோம்.
19.2.2019- அதிமுகவுடன் கூட்டணிக்கு சென்றபோது பத்து நிபந்தனைகளை விதித்தோம்.. அதில் முக்கியமான நிபந்தனை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்..
1.11.2019- இபிஎஸ் இல்லத்தில் சென்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில் குழுவாக சென்று வலியுறுத்தினோம்.
22.11.2020- வன்னியர் சங்க கூட்டு பொதுக்குழு கூட்டம் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டோம்.
1.12.2020 டிஎன்பிஎஸ் சி முன்பு மாபெரும் போராட்டத்தை நடத்தினோம். போராட்டம் முடிந்ததும் அப்போதைய முதலமைச்சர் இபிஎஸ் அழைத்து நிச்சயம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்கிறேன் என உத்தரவாதம் கொடுத்தார்.
இப்படி 2019-2021வரை பல கட்ட போராட்டங்களை நடத்தியதன விளைவாகத்தான் 2021ல் 10.5% இட ஒதுக்கீடு கிடைத்தது.
எனக்கு 10.5 உடன்பாடு கிடையாது ஏனென்றால் வன்னியர்கள் மொத்தம் 18 சதவீதம் உள்ளனர். பட்டியலின மக்கள் மூன்று பிரிவினரும் சேர்ந்தால்தான் 20 விழுக்காடு ஆனால் வன்னியர்கள் தனித்தே 18 விழுக்காடு உள்ளனர். எனவே இந்த 10 புள்ளி 5 இட ஒதுக்கீடு எல்லாம் முதற்கட்டம் மட்டும் தான் தனித்து வன்னியர்களுக்கு 18% இட ஒதுக்கீடு வேண்டும். வேறு வழி இல்லாமல் அன்றைக்கு நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க சொல்லி நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் எந்தெந்த சமுதாயம் எவ்வளவு மக்கள் தொகை இருக்கிறது என்ற புள்ளி விவரங்கள் முழுமையாக தெரியவரும்.
10.5% இட ஒதுக்கீடு ஓராண்டு மட்டும் அமலில் இருந்தது அது மட்டும் தொடர்ந்திருந்தால், இன்று வன்னியர்களில் 3800 பேருக்கு எம்பிபிஎஸ் கிடைத்திருக்கும், 800 பேருக்கு மருத்துவ பட்டம் மேற்படிப்பு கிடைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். 6000 பேருக்கு பொறியியல் கல்லூரிகளில் சீட்டு கிடைத்திருக்கும்.
6000 பேருக்கு தமிழக அரசின் பல்வேறு பணியிடங்களில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். 80 ஆயிரம் மாணவர்களுக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் சீட்டு கிடைத்திருக்கும்.
இந்த சீட்டுகளும் வேலைவாய்ப்பும் வன்னியர்களுக்கு கிடைக்காமல் போனதற்கு திமுக அரசாங்கம் தான் காரணம்.
எனக்கு வயிறு எரிகிறது, இவ்வளவு புள்ளி விவரங்கள் இருந்தும் எதுவுமே நடக்கவில்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக என்னிடம் வாக்குறுதி கொடுத்தார் நான் நிச்சயம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறேன் என்று சொன்னார் ஆனால் செய்யவில்லை.
2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?
ஸ்டாலின் அரசு வன்னியர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கிறது.
இது முதல் கட்ட ஆர்ப்பாட்டம் அடுத்ததாக சிறை நிரப்புகின்ற போராட்டத்தை நடத்த உள்ளோம்.. அதற்குப் பிறகும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் எங்களுக்கு தெரிந்த ‘அந்த போராட்டம்’ தான்.. அனைவரும் தயாராக இருக்கிறீர்களா என மக்களை பார்த்து கேட்கிறார்..
மூன்று ஆண்டுகளாக உங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் கொடுக்கிறோம் என்று திமுக அரசு பொய் சொல்லி ஏமாற்றி வந்தது கடைசி நேரத்தில் இப்போது கொடுக்க முடியாது என்று சொல்கிறார்கள்.
ஜனார்த்தனன் ஆணையம், 180 நாட்களில் இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
அதே ஜனார்த்தனன் ஆணையம்,அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு 243 நாட்களில் வழங்கியது.
ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் 1208 நாட்கள் ஆகியும் தமிழக அரசு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உங்கள் வீட்டிற்கு சென்றதும் தெருத்தெருவாக சென்று பிரச்சாரம் செய்யுங்கள் வன்னியர் விரோதி திமுக என்று.. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு வாக்களிக்க கூடாது. என அவர் பேசினார்.
