கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் கிசான் திட்டத்தில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்த இரண்டு நெட் செண்டர்களுக்கு சீல்.
இந்தியா முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் மழை மற்றும் வறட்சி காலத்தில் நிவாரணம் வழங்கும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தினை கடந்த 2018 ஆம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஏழை விவசாயிக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் 3 தவணையாக தலா 2000 என்ற வகையில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போலியான சர்வே எண்களை கொண்டும், இடைத்தரகர்கள் 1000 ரூபாய் பெற்று கொண்டு பல்வேறு நபர்களை கிசான் திட்டத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த
புகாரின் அடிப்படையில் ஆன்லைனில் கிசான் திட்டதில் பதிவு செய்யும் முறையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா இரிஷிவந்தியம் மற்றும் தியாக துருகம் பகுதியில் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதை அடுத்து அப்பகுதி உதவி வேளாண் இணை இயக்குனர்கள் அமுதா மற்றும் ராஜசேகரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் 13 டெம்ப்ரவரி ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக மணலூர் பேட்டை பகுதியில் அதிக அளவில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்ததாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரை அடுத்து இரண்டு நெட் செண்டர்களுக்கு (ஜெ.பி, பத்மஸ்ரீ) மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் வருவாய் வட்டாச்சியர் சிவச்சந்திரன் மற்றும் வேளாண் அதிகாரி ராஜா ஆகியோர் சீல் வைத்தனர்.
இவ்வாறு முறைகேடாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்த இன்னும் சில நெட் செண்டர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவைகளும் விரைவில் சீல் வைக்கப்படும் எனவும் திருக்கோவிலூர் வருவாய் வட்டாச்சியர் சிவச்சந்திரன் தெரிவித்தார்.